திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலை ஒட்டியுள்ள கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில் பத்ம தீர்த்த குளத்தை நோக்கி வட திசையை பார்த்தாற் போல ஒரு அதிசய கடிகாரம் இருக்கிறது. இது 1892 ம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக திருவாங்கூர் சமஸ்தான சுவடிகளிலிருந்து தெரிகிறது. இதை நாளிகை சூத்திர சுவடி என்றும் கூறுவர்.
அன்றிலிருந்து இன்று வரை இந்தக் கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பதுடன் , துல்லியமாக நேரமும் காட்டுகிறது. இது ஒரு புதுமையான விந்தையான கடிகாரம். கடிகாரத்தின் மேலே ஒரு மனிதனின் தலை, அந்த தலையின் இரு பக்கங்களிலும் இரண்டு ஆட்டுகடாக்கள் ஒன்றையொன்று பார்ப்பது போல் அமைந்துள்ளது. கடிகாரத்தின் முட்கள் 1 மணி காட்டும் போது அந்த மனிதனின் வாய் மெதுவாக திறக்க ஆரம்பிக்கும்.
வாய் முழுவதும் 2 ஆட்டு கடாவும் ஒரே நேரத்தில் அந்த மனித தலையில் வந்து மோதும்.ஒரு மணி அடிக்கும்.மனிதனின் வாய் மூடிக்கொள்ளும். அவ்வாறாக 12 மணியானால் மனிதனின் வாய் 12 தடவை திறந்து , திறந்து மூடும் . ஆட்டு கடாக்களும் 12 தடவை முட்டும். இந்த விந்தையான கடிகாரத்தை திறம்பட செய்து முடித்தவர் திருவனந்தபுரம் அருகிலுள்ள வஞ்சியூரை சார்ந்த ப்ரம்ம ஸ்ரீ குளத்தூரான் ஆச்சாரியா என்னும் விஸ்வகர்மா.
இவர் ஒரு புகழ் பெற்ற கொல்லரும் கூட.. நுட்பமான வேலைகளில் திறமை மிக்கவர். துப்பாக்கி முதல் பீரங்கி வரை எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பவர். திருவனந்தபுரம் மகாராஜாவும் , ஆலப்புழையில் இருந்த ஜான்கால்டிகேட் என்ற வெள்ளையரும் சேர்ந்து குளத்தூரான் ஆச்சாரியாவிடம் சொல்லி கடிகாரத்தை செய்ய வைத்தனர். இந்த கடிகாரம் சமீப காலம் வரை ஓடிக்கொண்டு இருப்பதுடன் துல்லியமாக நேரமும் காட்டி கொண்டு இருந்தது என்பதும் குறிப்பிடதக்கது.