பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டார் என்றும், அமெரிக்கா மிரட்டியுடன் போரை நிறுத்திவிட்டார் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதை பாகிஸ்தான் ஊடகங்கள் கொண்டாடி வருகின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கை இந்தியாவால் எடுக்கப்பட்டது என்பதும், இதனால் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், “நான் தான் போரை நிறுத்தினேன்” என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், அமெரிக்காவின் மிரட்டலுக்கு நரேந்திர மோடி பயந்து சரண்டர் ஆகிவிட்டார் என ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம் சாட்டினார்.
“எனக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மனோபாவம் நன்றாக தெரியும். ஏதாவது ஒரு அழுத்தம் வந்தால், உடனே பயந்துவிடுவார்கள். மோடியை அழைத்து, ‘போரை நிறுத்துங்கள்’ என்று சொன்னவுடன், ‘சரி’ என்று மோடி சொல்லிவிட்டார்,” என ராகுல் காந்தி கிண்டலாக கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ஊடகங்கள் ராகுல் காந்தியை கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தானின் அனைத்து முன்னணி ஊடகங்களிலும் ராகுல் காந்தியின் பேச்சு தான் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருப்பதாகவும், குறிப்பாக “மோடி சரணடைந்து விட்டார்” என்ற வார்த்தைக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஏற்கனவே “ராகுல் ஷெரீப், ராகுல் முனீர்” என பாஜக ராகுல் காந்தியை கிண்டல் செய்த நிலையில், தற்போது ராகுல் காந்திக்கு பாகிஸ்தானின் பாசம் உறுதியாகிவிட்டது என்று கூறி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் இதுபோன்ற கருத்துக்கள் நாட்டிற்கு ஆபத்தானவை என்றும், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக அவர் செயல்படவில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி விமர்சனம் செய்து வருகிறது.