ஐபிஎல் பெங்களூரு அணியின் வெற்றி விழா, சின்னச்வாமி ஸ்டேடியத்தின் முன்பாக நடந்த நிலையில் அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெற்றி அடைந்த கிரிக்கெட் வீரர்களைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்தின் முன்பாக கூடியிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நெரிசலால் இந்த நிகழ்ச்சி பெரும் சோகமாக மாறியது.
இந்த விபத்தில் இருந்து 3 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
1. அதிக கூட்டமான மெட்ரோ நிலையங்கள்
வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பயணம் செய்ததால் மெட்ரோ நிலையங்களில் அசாதாரணமாக கூட்டம் இருந்தது. இது அதிகாரிகள் கவனிக்க தவறிய முதல் விஷயம்
2. போலீசார் திணறல்
சின்னச்சாமி ஸ்டேடியம் முன்பாக திடீரென லட்சக்கணக்கானோர் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் போராடினர். பல சமூக ஊடக வீடியோக்களில் இது பதிவாகியுள்ளது.
3. ஸ்டேடியம் கதவுகள் மூடப்பட்டன
ஸ்டேடியம் கதவுகள் மூடப்பட்டதால் மோசமான சூழ்நிலை உருவானது. அதிகமான ரசிகர்கள் ஒரே இடத்தில் சிக்கியதால் அங்கிருந்து வெளியேற கூட இடமில்லாத சூழல் உருவானது.
இந்த அளவுக்கு கூட்டம் கூடும் என்று விழா ஏற்பாட்டாளர்களும் காவல்துறையும் எதிர்பார்க்கவில்லை. மிதமான கூட்டம் வரும் என்றுதான் எதிர்பார்த்து இந்த விழாவை நடத்தினர். இருப்பினும் 5000 போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் லட்சக்கணக்கில் வந்ததால் தான் 5000 பேரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இது போன்ற கூட்டம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் இதை நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் துணை முதல்வர் டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் ஸ்டேடியத்தின் உள்ளே நுழைய முயன்றதாகவும், ஸ்டேடியத்தின் கதவை உடைத்ததாகவும், வெறும் 35 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே ஸ்டேடியத்தில் கொள்ளளவு இருக்கும் நிலையில், இரண்டு முதல் மூன்று லட்சம் பேர் வந்ததால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.
முதல்வர் சித்தராமையா கூறியபோது வெற்றி கொண்டாட்டத்தின் போது மிகப்பெரிய பேரிழப்பு நிகழ்ந்தது துரதிஷ்டமானது என்றும், உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காயம் அடைந்தவர்கள் இலவச சிகிச்சை வழங்கப்படும் என்றும் கூறினார்,
இந்த நிலையில் ஐபிஎல் இறுதி போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்திருக்கலாம் என்றும், பஞ்சாப் ஜெயித்திருந்தால் 11 பேர் உயிராவது மிஞ்சியிருக்கும் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.