கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, மோடியை பார்த்து “நீங்கள்தான் பெஸ்ட்’ என்றும், “உங்களை போல் நானும் ஆக முயற்சி செய்கிறேன்” என்றும் கூறியது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமர் மோடி புன்னகையுடன் ‘லைக்’ காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான நட்பு தொடர்ந்து வலுப்பெற்று, நமது மக்களுக்கு பெரும் பயனளிக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.
மோடியும் ஜார்ஜியா மெலோனியும் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில், குறிப்பாக துபாயில் நடந்த COP28 உச்சி மாநாட்டில் எடுத்த செல்ஃபி உட்பட, தங்கள் நட்புறவை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த செல்ஃபிக்கு மெலோனி, “COP28 இல் நல்ல நண்பர்கள், #Melodi” என்று தலைப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நட்பு ரீதியான அணுகுமுறை, இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ராஜதந்திர உறவில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது. இரு தலைவர்களும் எரிசக்தி மற்றும் தொழில் போன்ற முக்கிய துறைகளில் இணைந்து செயல்பட மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கேற்பு, இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, அதன் ஆற்றல், மற்றும் இந்தியா உலக அரங்கில் வகிக்கும் தலைமை பதவியைப் பிரதிபலிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
ஜி7 தலைவர்கள் மாநாடு நிறைவடைந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்னி, “2018 முதல் ஒவ்வொரு ஜி7 மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார். இது இந்திய பொருளாதாரத்தின் அளவு, அதன் ஆற்றல், தொழில்நுட்ப வளர்ச்சி, ஜி20 போன்ற பல்வேறு உலக அரங்குகளில் இந்தியா வகிக்கும் தலைமைப் பதவி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது,” என்றார்.
“ஜி7 இன் தலைவராக, இத்தகைய சூழலில் இந்தியப் பிரதமரை வரவேற்பது முற்றிலும் இயல்பானது. அடுத்த ஆண்டும் இந்தியப் பிரதமர் ஜி7 இல் பங்கேற்பார் என்று நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன்,” என்றும் கார்னி நம்பிக்கை தெரிவித்தார்.