பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததால் துருக்கியை அடுத்து அஜர்பைஜானுக்கும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
ஏற்றுமதி விவரங்கள்:
2023ஆம் ஆண்டு இந்தியா $1.227 பில்லியன் மதிப்புள்ள கச்சா எண்ணெய் அஜர்பைஜானிலிருந்து இறக்குமதி செய்தது. 2024-இல், இந்த அளவு $733.09 மில்லியனாக குறைந்தது. ஓரளவு இறக்குமதி குறைந்தாலும் அஜர்பைஜான் இந்தியாவின் பல்வகை எரிசக்தி ஆதாரத் திட்டத்தில் முக்கிய பங்குதான் வகிக்கிறது.
‘Confederation of All India Traders’ (CAIT) அமைப்பு, இந்திய சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு பயணிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளது. எனவேஅஜர்பைஜானுக்கு புதிதாக திருமணம் செய்த மணமக்கள், சுற்றுலா பயணிகள் செல்லும் வாய்ப்பு குறைவு என்பதால் பொழுதுபோக்கு மற்றும் சாகச சுற்றுலா துறைகளில் அஜர்பைஜான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில், அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.
அப்போது அஜர்பைஜான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்: பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தோம், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தோம். எல்லா தரப்பும் அமைதியுடன் நடந்துகொண்டு, உரையாடல் வழியே தீர்வு காண வேண்டும்.” என்று கூறியிருந்தது.
இந்திய பயணிகள் உணர்வுகளைப் பிரதிபலிக்க, MakeMyTrip மற்றும் EaseMyTrip போன்ற நிறுவனங்கள் தன்னார்வமாக அஜர்பைஜானுக்கான டூர் பேக்கேஜ்களை நிறுத்தி விட்டன. கடந்த ஒரு வாரமாக இந்திய பயணிகளின் தேசிய உணர்வுகள் தீவிரமாக உள்ளன. அஜர்பைஜான், துருக்கி பயண முன்பதிவுகள் 60% குறைந்துள்ளன, ரத்து செய்தவர்கள் எண்ணிக்கை 250% உயர்ந்துள்ளது,” என MakeMyTrip தெரிவித்தது.
அஜர்பைஜான் சுற்றுலா வாரியத்தின் தரவுகளின்படி:
2014-இல் 4,853 இந்தியர்கள் அஜர்பைஜான் சென்றனர்
2023-இல்: 1.17 லட்சம்
2024-இல்: 2.43 லட்சம் இந்தியர்கள் சென்றுள்ளனர்
இதன் மூலம் அஜர்பைஜானுக்கு இந்தியா நான்காவது பெரிய சுற்றுலா ஆதார நாடாக உருவெடுத்துள்ளது.
இந்தியா -அஜர்பைஜான் நேரடி விமான சேவைகள்
டெல்லி – பாகு இடையே வாரத்திற்கு 10 நேரடி விமானங்கள்
மும்பை – பாகு இடையே 4 நேரடி விமானங்கள்
CAIT பொதுச்செயலாளர் ப்ரவீன் கண்டேல்வால் தெரிவித்ததாவது: ஒரு இந்திய சுற்றுலாப் பயணி சராசரியாக 2,170 AZN ( $1,276) செலவழிக்கிறார். இந்தியர்கள் அஜர்பைஜானுக்கு செலுத்தும் மொத்த தொகை $308.6 மில்லியன் வரை இருக்கிறது. இது நிறுத்தப்பட்டால், பொழுதுபோக்கு, திருமணம், சாகச பயண துறைகள் பாதிக்கப்படும்.”
அதேபோல் SOCAR நிறுவனம், MRPL மற்றும் ONGC-வுடன் கச்சா எண்ணெய், LNG மற்றும் பெட்ரோலிய உற்பத்தி வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
ONGC Videsh Ltd, $1.2 பில்லியன்-ஐ முதலீடு செய்து, Azeri-Chirag-Gunashli எண்ணெய் களங்கள் மற்றும் Baku-Tbilisi-Ceyhan குழாய் வழி பங்களிப்பு பெற்றுள்ளது.
இந்தியாவின் அஜர்பைஜானுக்கு ஏற்றுமதி
2024–25 (ஏப்ரல்–பிப்ரவரி): $86.07 மில்லியன்
2023–24: $89.67 மில்லியன்
அஜர்பைஜான் இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகளில் 0.02% மட்டுமே. எனவே இந்தியாவுக்கு சிறிய பாதிப்பு மட்டும் தான் இருக்கும்.
முக்கிய ஏற்றுமதிகள்:
அரிசி: $34.4 மில்லியன் (அஜர்பைஜானின் மொத்த அரிசி இறக்குமதியின் 80.8%)
ஸ்மார்ட்போன்கள்: $24.7 மில்லியன் (16.2%)
அலுமினியம் ஆக்சைடுகள்: $20.29 மில்லியன் (38.6%)
மருந்துகள்: $27.7 மில்லியன்
மொபைல் போன்கள் மட்டும்: $11.5 மில்லியன் (12.4%)
கடந்த சில வருடங்களில் 30 இந்திய திரைப்படங்களும் விளம்பரங்களும் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் பெரும்பாலான படப்ப்பிடிப்பு அஜர்பைஜானில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனி அஜர்பைஜானில் இந்திய படங்களின் படப்பிடிப்பு நடக்க வாய்ப்பு இல்லை என்பதால் திரைத்துறையும் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம்.
ஆனால் அதே நேரத்தில் அஜர்பைஜானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் மொத்த பொருட்களில் 98% கச்சா எண்ணெய் தான். அதனால், துருக்கி பொருட்களை புறக்கணிப்பதைவிட, அஜர்பைஜானுடன் வர்த்தகத்தை உடனடியாக நிறுத்துவது எளிதானது அல்ல என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.