இந்திய அரசு தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தானுக்கு கொடுத்து அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் நினைவூட்டியுள்ளது. இந்த பட்டியலுக்கு உட்பட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது, உலகளவில் பாகிஸ்தானை திரையில் கொண்டு வரும் இந்தியாவின் மற்றொரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து கூறுகையில், “தீவிரவாதம் தொடர்பான பட்டியல் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் அந்த பட்டியலில் உள்ளவர்களை எப்போது ஒப்படைப்பார்கள் என்பதுதான் கேள்வி,” என தெரிவித்துள்ளது.
“இதே சமயம், பேச்சுவார்த்தையும் தீவிரவாதமும் ஒன்றாக செல்ல முடியாது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். தீவிரவாதம் தொடர்பாக, இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட வேண்டிய முக்கிய தீவிரவாதிகள் பற்றிய பட்டியல் பாகிஸ்தானுக்கு சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை ஒப்படைப்பது குறித்து பேச இந்தியா தயார்,” என்று இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது வெளியுறவுத்துறை பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரெடிட் எடுத்துக்கொண்டதை குறிப்பிட்ட அவர், இதற்கு முன்னர் பதில் அளித்துள்ளதாகவும், இந்தியா–பாகிஸ்தான் விவகாரங்கள் எப்போதும் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆகவே இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
“ஜம்மு மற்றும் காஷ்மீர் தொடர்பான எந்தவொரு இருதரப்பு விவாதமும், பாகிஸ்தான் இந்தியாவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் பிரதேசத்தை விடுவிப்பதை துவக்கமாக அமைய வேண்டும். சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து, பாகிஸ்தான் எல்லைக்கடந்து நடக்கும் தீவிரவாதத்திற்கு தனது ஆதரவை நிரந்தரமாகவும் நம்பத்தகுந்த முறையிலும் நிறுத்தும் வரை, அந்த ஒப்பந்தம் நிலுவையில் தான் இருக்கும். நமது பிரதமர் கூறியதுபோல், ‘நீர் மற்றும் இரத்தம் ஒன்றாக ஓட முடியாது’,” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் டிப்ளமடிக் முயற்சியில் பங்கேற்கும் அனைத்து கட்சி குழுக்கள் குறித்து அவர் கூறுகையில், ஏழு குழுக்களில் மூன்று தற்போது பயணத்தைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
“இது ஒரு அரசியல் பணியாகும். உலகுக்கு நாம் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியுடன் போராடுவதை உறுதி செய்ய விரும்புகிறோம். அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்திற்கு எதிராக உலகம் ஒன்று கூட வேண்டும். எல்லைக்கடந்து நடக்கும் தீவிரவாதத்துக்கு பொறுப்பானவர்களை உலகம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை வழக்கமாக செய்கிற பாகிஸ்தான் போன்ற நாடுகளின் செயல்களை வெளிக்கொண்டு வரவேண்டும். அவர்கள் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு அவர்கள் பொறுப்பு ஏற்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்,” என்றும் அவர் கூறினார்.