தற்போது குழந்தைகளை மெல்ல சமூக விரோதிகளாக மாற்றும் சைத்தானாக செல்போன் மாறி வருகிறது. அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ரீல்ஸ் மோகத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது, ஆபத்தினை உணராமல் செல்பி, வீடியோ எடுப்பது, பப்ஜி போன்ற கேம்களில் நேரத்தை வீணடிப்பது என பெரும் ஆபத்தினை நோக்கி மாணவர் சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ செல்போன் கண்டிப்பாக வேண்டும் இல்லையெனில் மனதளவில் பாதிக்கப்பட்டு விபரீத முடிவுகளையும் எடுக்கின்றனர்.
இதன் காரணமாகவே உலக நாடுகள் பலவற்றில் 16 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே ஸ்மார்ட் வைத்துக் கொள்ள சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் அத்தகைய கட்டுப்பாடுகள் கிடையாது. இதனால் மாணவர்கள் செல்போனுக்கு அடிமையாகி கண் பிரச்சினை, மன அழுத்தம், படிப்பில் கவனமின்மை, விளையாட்டில் ஈடுபடாமல் இருத்தல் போன்றவற்றால் பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு செல்போன் என்னும் எமன் குழந்தைகளைச் சீரழிக்கும் வேளையில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கிறது.
பாலக்காட்டில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்துள்ளார். ஏற்கனவே கல்வி நிறுவனங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைப் பார்த்த ஆசிரியர் அதனைப் பறிமுதல் செய்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட மாணவன் நேராக தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்று “என் செல்போனைக் கொடுத்து விடு, இல்லைன்னா உன்ன வெளில வச்சுப் போட்டுருவேன்..” என்று மிரட்டுகிறார்.
மாணவன் மிரட்டுவதை வீடியோவாகப் பதிவு செய்தனர். மேலும் ஆசிரியரிடமும் மரியாதைக் குறைவாக ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார். இந்தச் சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் மோகத்தால் பள்ளி மாணவர்கள் சீரழிவதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் பார்க்கின்றனர். வெளிநாடுகளைப் போல செல்போன் பயன்படுத்துவதற்கு இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.