நாட்டையே உலுக்கி எடுத்த கேரள ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் காதலியான குற்றவாளி கரீஷ்மாவிற்கு நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜும் (25), குமரிமாவட்டம் களியக் காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மாவும் (22) நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். கல்லூரியில் நட்பாகப் பழகி பின் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2022 அக்டோபர் 14-ல் காதலன் ஷாரோன் ராஜுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பின் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி 11 நாட்கள் கழித்து உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் அடைந்த பெற்றோர் பாறசாலை காவல் நிலையத்தில் காதலி கிரீஷ்மா மீது புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் காதலி கிரீஷ்மாவிற்கு வேறொரு பணக்கார இடத்தில் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர்.
இதனால் பணத்திற்கு ஆசைப்பட்டு ஷாரோன் ராஜை கை விட நினைத்தார். எனினும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களால் தனக்குப் பிரச்சினை ஏற்படும் என நினைத்து, அவரை தன் தாய்மாமனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் போட்டார். அதன்படி ஷாரோனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
இதனால் வயிற்று வலி ஏற்பட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வழக்கில் குற்றவாளிகளாக கிரீஷ்மா, அவரது தாய்மாமன் நிர்மல்குமார் மற்றும் அவரது தாய் சிந்து ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று நெய்யாற்றங்கரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி இவர்களுக்கு தண்டனை அறிவித்தார். அதில் கொலை செய்த காதலி கிரிஷ்மாவிற்கு மரண தண்டனையும், தாய்மாமன் நிர்மல் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தாய் சிந்துவை விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
11 நாட்கள் மரணப் படுக்கையிலும் தன் காதலியை கடைசிவரை ஷாரோன் ராஜ் காட்டிக் கொடுக்கவில்லை என நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.