பாகிஸ்தானுக்கு கடன் உதவித் தொகையை வழங்க IMF புதிய 11 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் குறிப்பாக இந்தியாவுடன் பதற்றம் ஏற்படும் திட்ட இலக்குகளால் நிதி வழங்குதல் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கடன் சுமை நிறைந்த பொருளாதாரத்திற்கு உதவியாக வழங்கப்படும் அடுத்த கட்ட நிதித் தொகையை விடுவிக்க, சர்வதேச நாணய நிதியம் (IMF) புதியதாக 11 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று பாகிஸ்தான் அடிப்படையிலான எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் செய்தி வெளியிட்டது.
IMF கடந்த சனிக்கிழமை வெளியிட்ட “ஸ்டாஃப் லெவல்” அறிக்கையில், “இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றம் தொடர்ந்தால் அல்லது மேலும் தீவிரமானால், அந்த பதற்றம் திட்டத்தின் வரிவிதிப்பு, வெளிநாட்டு நிதி நிலை மற்றும் மறுசீரமைப்பு இலக்குகளில் அதிக ஆபத்துகளை உருவாக்கும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
11 புதிய நிபந்தனைகளில் முதன்மையானது என்னவெனில் 2025-26 நிதியாண்டுக்காக ரூ.17.6 டிரில்லியன் மதிப்பிலான புதிய பட்ஜெட்டை IMF உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கி அங்கீகரிக்க வேண்டும் என்பது ஆகும்.
புதிதாக ஒரு முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, விவசாய வருமான வரி சட்டத்தை முழுமையான திட்டத்தின் கீழ் செயல்படுத்த வேண்டும். இதில், வருமான வரி பத்திரங்களை செயலாக்க ஒரு செயல்பாட்டு அமைப்பை உருவாக்குதல், வரி செலுத்துனர்களை அடையாளம் காணுதல் மற்றும் பதிவு செய்தல், தகவல் பிரச்சாரம் மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் திட்டம் ஆகியவையும் அடங்கும். இதற்கான காலக்கெடும் கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது நிபந்தனையாக IMF வழங்கிய “கவர்னன்ஸ் டயக்னோஸ்டிக் அசெஸ்மென்ட்” பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு, பாகிஸ்தான் அரசு ஒரு நிர்வாக நடவடிக்கை திட்டத்தை வெளியிட வேண்டும்.
அடுத்த நிபந்தனையாக மக்களின் உண்மையான கொள்முதல் திறனை பாதுகாப்பதற்காக, நிபந்தனையற்ற பண உதவி திட்டத்திற்கு வருடாந்த பரிசீலனை அடிப்படையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும் என்பது ஆகும்.
மேலும் 2027ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானின் நிதி துறையின் செயல்திட்டம் மற்றும் 2028ஆம் ஆண்டுக்கு மேல் நடைபெறும் நிறுவன மற்றும் ஒழுங்குமுறை சூழ்நிலையை வெளிப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வெளியிட வேண்டும்.
மேலும் IMF ஐந்து ஆண்டுகளுக்குள் பழைய வாகனங்களை வணிக ரீதியாக இறக்குமதி செய்வதற்கான எல்லா கட்டுப்பாடுகளையும் நீக்கும் வகையில் தேவையான சட்டங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு பாகிஸ்தானை கேட்டுள்ளது. இதன் நோக்கம் வர்த்தகத் துறையை திறந்துவைக்கவும், வாகனங்கள் குறைந்த விலையில் கிடைக்கவும் செய்யும் முயற்சி ஆகும்.
IMF, பாகிஸ்தானுக்கு வழங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் “Extended Fund Facility (EFF)” மற்றும் புதிய USD 1.3 பில்லியன் மதிப்பிலான “Resilience and Sustainability Facility (RSF)” ஆகிய இரண்டையும் மீளாய்வு செய்தது.
அதன் பின்னணியில், பாகிஸ்தானுக்கான USD 7 பில்லியன் தொகைத் திட்டத்தில், இதுவரை USD 2 பில்லியன் வரை பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மீதத்தொகையை பாகிஸ்தான் பெற வேண்டுமெனில் 11 நிபந்தனைகளையும் கடைபிடிக்க வேண்டும் என IMF பாகிஸ்தானுக்கு வலியுறுத்தியுள்ளது. இதனால் IMF கொடுக்கும் நிதியை பாகிஸ்தான் தீவிரவாதம் உள்ளிட்ட தவறான செயல்களுக்கு பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு இந்தியா கொடுத்த அழுத்தமே காரணமாகவும் கூறப்படுகிறது.