குஜராத் மாநிலம் அஹமதாபாதில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியா உருவாக்கிய உள்ளூர் தயாரிப்பான பிரமோஸ் அதிவேக ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என தெரிவித்தார்.
“இந்தியாவின் உள்ளூர் தயாரிப்பான ப்ரமோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் விமான தளங்களை அழிக்க செயல்பட்ட போது, பாகிஸ்தானுக்கு சீனாவிலிருந்து கிடைத்திருந்த விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு செயலற்றதாகவே இருந்தது. இந்திய விமானப்படை மிகச்சரியாக குறி வைத்துத் தாக்கியது. பாதுகாப்பாக கருதப்பட்ட பாகிஸ்தானின் பல பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது,” என அமித் ஷா தெரிவித்தார்.
“ஆபரேஷன் சிந்தூர்” வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றதாக எழுதப்படும், அதனால் எல்லைப் பாதுகாப்பு வலுப்பெற்றதோடு, பாகிஸ்தான் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட ஒரு வாய்ப்பாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
முந்தைய சர்ஜிகல் ஸ்ட்ரைக் மற்றும் விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீரில் மட்டும் நடைபெற்றன. ஆனால் “ஆபரேஷன் சிந்தூர்” பாகிஸ்தானின் உள்நாட்டிற்கே 100 கிலோமீட்டர் உள்ளே நுழைந்து, தீவிரவாதிகளையும் அவர்களின் இயக்க மையங்களையும் அழித்தது என்று அவர் வலியுறுத்தினார்.
“பாகிஸ்தான் எப்போதும் உலகிற்கு ‘எங்களிடம் தீவிரவாதம் இல்லை, இந்தியா பொய்யான புகார்களை கொடுக்கிறது’ என்று கூறிக்கொண்டிருந்தது. ஆனால் ‘ஆபரேஷன் சிந்தூர்’யில் ஏவுகணைகளால் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டார்கள், இதன் மூலம் பாகிஸ்தான் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டப்பட்டது,” என்றும் அமித் ஷா கூறினார்.
“பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதும், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதென்பது உறுதியாகி விட்டது. அதைவிட, பாகிஸ்தானின் உயர் ராணுவ அதிகாரிகள், தாக்குதலில் இறந்த தீவிரவாதிகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்ததை நாங்கள் கண்டோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இதன் மூலம் பாகிஸ்தான் இராணுவம், பாகிஸ்தான் அரசு மற்றும் தீவிரவாதம் ஆகிய மூன்றுக்கும் உள்ள தொடர்பு உலகமெங்கும் தெரிய வந்துவிட்டது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை நடத்துகிறது என்பதும் உலகிற்கு தெரியவந்துவிட்டது,” என்றும் அமித் ஷா வலியுறுத்தினார்.