பாகிஸ்தானுக்காக உளவுசெய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா லாகூரின் அனார்கலி பஜாரில் சுற்றிக்கொண்டிருக்கும் போது, ஏகே-47 துப்பாக்கியுடன் குறைந்தது ஆறு பேர் அவருடைய பாதுகாப்பிற்காக இருந்தனர் என இதனை நேரில் பார்த்த ஸ்காட்லாந்து யூடியூபர் கல்லம் மில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“Callum Abroad” எனும் யூடியூப் சேனல் வைத்திருக்கும் ஸ்காட்லாந்து யூடியூபர் கல்லம் மில் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் சென்றிருந்தார். லாகூரின் அனார்கலி பஜாரில் அவர் எடுத்த வீடியோவில் “No Fear” என எழுதப்பட்ட ஜாக்கெட் அணிந்தவர்களும் துப்பாக்கியுடன் நின்றவர்களும் உள்ளனர். அதன்பின்னர் அவர்களது மத்தியில் ஜோதி மல்ஹோத்ரா காணப்படுகிறார்.
கல்லம் தன்னை ஸ்காட்லாந்து யூடியூபர் என அறிமுகப்படுத்த, ஜோதி பாகிஸ்தானுக்கு இது முதல் பயணமா எனக் கேட்கிறார். கல்லம் “ஐந்தாவது முறை” என பதிலளிக்கிறார். இந்தியா வந்திருக்கிறாயா எனவும், தன்னை “இந்தியர்” என்று அறிமுகப்படுத்துகிறார். பாகிஸ்தானின் வரவேற்பு எப்படி என்று கேட்டபோது, “அருமை” என பதிலளிக்கிறார் ஜோதி.
ஜோதி நடக்கும்போது, அவரை சுற்றியுள்ள ஆயுததாரர்கள் பாதுகாவலர்கள் என்பதை கல்லம் உணர்கிறார். “ஏன் இப்படி துப்பாக்கியுடன் பாதுகாப்பு தேவை?” என வியக்கிறார்.
இந்த வீடியோ ஜோதிக்கு பாகிஸ்தானில் கிடைத்த விசேஷ அனுகூலங்கள் குறித்து சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பாக். உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்ததாகவும், இந்தியாவுக்கு வந்த பிறகும் தொடர்பில் இருந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
அவளது செலவுகள் அவரது வருமானத்துடன் பொருந்தவில்லை என்றும், பாகிஸ்தான் “ஃபண்ட் செய்யப்பட்ட பயணம்” போன்று இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். பின்னர் ஜோதி சீனாவிற்கும் சென்று அங்கு மகிழ்ச்சிகரமாக சுற்றியதாகவும் தெரிகிறது.