இந்தியா மற்றும் பாகிஸ்தான் DGMO மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என செய்திகள் வெளியான நிலையில் இன்று எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், மே 12 அன்று இரு நாடுகளும் தொலைபேசியில் பேசியபோது உறுதி செய்யப்பட்ட தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் தொடரும் என்றும், அதற்கான கால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று எந்த DGMO பேச்சுவார்த்தையும் இல்லை. மே 12 இல் நடந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பர அத்துமீறலுக்கு இடமளிக்காத நிலை தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு முடிவுத் தேதியே இல்லை” என ஒரு உயர் ராணுவ அதிகாரி கூறினார்.
இந்த உறுதிமொழி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் மே மாதத்தின் தொடக்கத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர் ஏற்பட்ட எல்லை பதற்றத்துக்குப் பிறகு வந்துள்ளது. அதன் பதிலடி நடவடிக்கையாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத தொடர்புடைய இடங்களை இலக்காக கொண்டது.
பாகிஸ்தான் DGMO, இந்தியா DGMO லெ.ஜென். ராஜீவ் காய் அவர்களை மே 10 அன்று அழைத்தபின், இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் உறுதி செய்திருந்தாலும், அதற்குப் பிறகு மீறல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தானிய படைகள் சர்வதேச எல்லை மற்றும் LOC-இன் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடைசி அதிகாரப்பூர்வ DGMO தொடர்பு மே 12 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் எல்லைப் பகுதிகளில் அமைதியை பேணுவது மற்றும் தாக்குதல் நடத்துவதை தவிர்ப்பது குறித்து இரு தரப்பும் கலந்துரையாடினர்.
இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து எந்த தகவலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.