இந்தியாவில் ஸ்டார்லிங் சேவை தொடங்க மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது இந்தியாவில் அதன் சேவை கட்டணம் எவ்வளவு இருக்கும் என்ற தகவல் கசியப்பட்டுள்ளது. இதனை பார்த்த தொலைத்தொடர்பு பயனாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஏற்கனவே ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய மூன்று பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிறுவனங்கள் எல்லாம் ₹100, ₹200 என குறைந்த கட்டணத்தில் ரீசார்ஜ் முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும், டெபாசிட் ஆக எந்தவித பணமும் கட்ட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கின்ற நிலையில், அந்த இணைப்பை பெறுபவர்கள் ஒரு சாட்டிலைட் டிஷ் வாங்க வேண்டும். அதன் விலை ₹33,000. அதுமட்டுமின்றி, மாதம் ₹3,000 குறைந்தபட்சம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ஸ்டார்லிங்க் சேவையை முதல் ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இலவச சேவையாக இருந்தாலும் ₹33,000 மதிப்பிலான சாட்டிலைட் டிஷ் வாங்க வேண்டியது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலவச சோதனை முடிந்தவுடன் இந்த சேவை நமக்கு திருப்தியாக இல்லை என்றால், அந்த டிஷ் திரும்ப தர முடியாது, பணமும் திரும்ப கிடைக்காத நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே ₹33,000 கொடுத்து டிஷ் வாங்கி, அதை வீட்டில் பொருத்தி, அதன் பின்னர் மாதம் ₹3,000 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு ஏற்றதா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.
இந்தியாவை பொருத்தவரை, கிட்டத்தட்ட 75% பேர் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். சாட்டிலைட் டிஷ் பொருத்தி விட்டு, பிறகு வேறு வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை கழற்றி மற்ற இடத்தில் பொருத்த வேண்டிய தொல்லையும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் ₹200 – ₹300 செலுத்தி ஒரு மாதம் முழுவதும் அன்லிமிடெட் கால் செய்து வரும் இந்தியர்களுக்கு, மாதம் ₹3,000 ரீசார்ஜ் செய்வது எட்டாக்கனியாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சேவை கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு கூட இன்டர்நெட் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது என்று கூறினாலும், கிராமப்புறத்தில் உள்ளவர்கள் யார் ₹33,000 செலுத்தப் போகிறார்கள்? யார் மாதம் ₹3,000 ரீசார்ஜ் செய்யப் போகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் மட்டுமல்லாமல், நமது அண்டை நாடுகளான வங்கதேசம், பூடான் நாடுகளிலும் இதே ₹33,000 மற்றும் ₹3,000 கட்டணத்தில் தான் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த சேவை எந்த அளவுக்கு வரவேற்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.