போனால் போகட்டும் போடா.. விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்று கொள்ளாதீர்கள்.. ஒரு தாயின் கண்ணீர் பதிவு..!

  “குழந்தை இல்லை என்றாலும், போனால் போகட்டும் போடா என்று விட்டுவிடுங்கள். ஆனால், விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள்” என ஒரு தாய் சமூக வலைதளத்தில் செய்த கண்ணீர் பதிவு தற்போது…

baby

 

“குழந்தை இல்லை என்றாலும், போனால் போகட்டும் போடா என்று விட்டுவிடுங்கள். ஆனால், விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள்” என ஒரு தாய் சமூக வலைதளத்தில் செய்த கண்ணீர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெடிட் சமூக வலைதளத்தில் ஒரு ஒரு பெண் மிகவும் கண்ணீருடன் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், “விந்தணு தானம் பெற்று நானும் எனது கணவரும் முழு மனதுடன் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். ஆரம்பத்தில் எனது கணவர் குழந்தையை பாசத்துடன் வளர்த்தார். ஆனால், இரண்டு வயதானவுடன் திடீரென அவர் எங்கள் மகனை வெறுக்கத் தொடங்கினார். இப்போது விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றது மிகப்பெரிய தவறு என்று நான் உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

“திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை என்பதால், விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றுக்கொள்ள இருவருமே சேர்ந்துதான் முடிவு செய்தோம். என் மகன் பிறந்த போது, என் கணவர் நல்லவராக இருந்தார். எங்கள் குழந்தையின் டயப்பர் மாற்றுவார்; இரவில் விழித்திருந்து உணவு கொடுப்பார். ஒரு முழுமையான தந்தையாக இருந்தார்.

ஆனால், எனது மகன் இரண்டு வயதை எட்டியதும் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மகன் முரண்டு பிடிக்கத் தொடங்கினான். என் கணவரின் குணங்களில் ஒன்று கூட அந்த குழந்தைக்கு இல்லை என்பதை புரிந்து கொண்டார். அதாவது விந்தணு தானம் கொடுத்தவரின் குணநலன்கள் அந்த குழந்தையில் தெரிய ஆரம்பித்ததும் எனது கணவர் குழந்தையை வெறுக்க தொடங்கிவிட்டார்.

இப்போது எல்லாம் என் மகனை அவர் கட்டிப்பிடிப்பதில்லை, விளையாட விரும்புவதில்லை. குழந்தை அருகில் பாசமாக வந்தாலும், தள்ளிவிடுகிறார் அல்லது என்னை பார்த்துக்கொள்ளச் செய்கிறார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. இப்போதுதான், விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றது வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு என்று உணர்கிறேன். இதிலிருந்து எப்படி வெளியே வருவது எனக்கு தெரியவில்லை.”

“விந்தணு தானம் மூலம் குழந்தை பெறுவது என்ற முடிவை இருவரும் சேர்ந்துதான் எடுத்தோம். ஆனால், மகனின் குணநலன்கள் அவரை பாதித்துள்ளன. இதில் கொடுமை என்னவென்றால், என் மகன் ஒரு அப்பாவி இரண்டு வயது குழந்தை, அன்புக்காகவே ஏங்குகிறான்!” என அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு ஏராளமானோர் அறிவுரை கூறி வருகின்றனர். “உங்கள் கணவரை உடனே ஒரு உளவியல் ஆலோசனை பெற வலியுறுத்துங்கள். இல்லை எனில், குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம்” என ஒரு பயனர் கூறினார்.

“உங்கள் கணவரை மாற்ற முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால், அவர் இடமிருந்து விலகிவிடுங்கள்” என இன்னொரு பயனர் தெரிவித்தார்.

“குழந்தை இல்லையென்றால், தாராளமாக ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். அதில் பெரிய பிரச்சனை வராது. ஆனால், இன்னொருவரிடம் இருந்து விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றால், இதுபோன்ற சிக்கல்கள் வரத்தான் செய்யும்” என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.