பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து எச்சரிக்கை விடுத்து, சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.
லான்செட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, 2050ஆம் ஆண்டுக்குள் 44 கோடி இந்தியர்கள் உடல் பருமனாக இருப்பார்கள் என்ற அபாயகரமான கணிப்பை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மன் கி பாத் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி உடல் பருமன் அபாயம் குறித்து பேசியுள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் அவர் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அவர் உணவுப் பழக்க வழக்கங்களில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம், நமது எதிர்காலத்தை ஆரோக்கியமானதாகவும் நோயற்றதாகவும் மாற்ற முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா மட்டுமின்றி 2050ஆம் ஆண்டுக்குள் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக அளவில் உடல் பருமனும் அதிகபட்ச உடல் எடையுமுள்ள மக்கள் இருப்பார்கள், இது உலகளாவிய ஆரோக்கியப் பிரச்சினைகளும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.