திமுக கூட்டணி இதுவரை சில தேர்தலில் அதிக சதவீத ஓட்டுகளை பெற்றதற்கு காரணம் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஆதரவே. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது, இப்போது கூட கூட்டணி வைக்குமா என்ற சந்தேகம் இருப்பதன் காரணமாக, அதிமுகவுக்கு சிறுபான்மையினர் ஓட்டு போட தயங்கி வருகிறார்கள்.
திமுக சில விஷயங்களில் அதிருப்தியாக நடந்து கொண்டாலும் வேறு வழியில்லாததால் அந்த கூட்டணிக்கு தான் சிறுபான்மையினர் ஓட்டு போட்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது ஒரு மாற்றுக் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவாகியிருப்பது மட்டுமல்லாமல், சிறுபான்மையினரை அரவணைக்கும் விஜய்யின் நடவடிக்கையும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் ஆதரவு விஜய்க்கு சென்றுவிடுமா என்ற அச்சம் தமிழக அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
ஏற்கனவே, இளைய தலைமுறை மற்றும் புதிய வாக்காளர்களின் பெரும் பகுதி விஜய்க்கே ஆதரவாக உள்ளதாக ஒரு சர்வே கூறியுள்ளது. இதனுடன், சிறுபான்மையினரின் ஆதரவும் கிடைத்தால், தமிழக வெற்றி கழகத்திற்கு மிகப்பெரிய அளவில் வாக்கு சதவீதம் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமன்ற இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.