48 மணி நேரம் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி, இந்தியாவை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த திட்டம் தொடங்கும் முன்பே இந்தியா பாகிஸ்தானை தாக்கி, எட்டு மணி நேரத்தில் “போரை நிறுத்துங்கள்” என்று சரணடையச் செய்ய வைத்துவிட்டதாக இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அனில் செளஹான் தெரிவித்துள்ளார்.
புனே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், மே 10ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தான் ஒரே நேரத்தில் இந்தியா மீது பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டது என தெரிவித்தார். அதன் நோக்கம், 48 மணி நேரத்தில் இந்தியாவை முழுமையாக தங்களது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஆனால் நிலைமை வேறு மாதிரி இருந்தது.
அதற்கு முன்பே இந்தியா அதிரடியாக தாக்கியது. பாகிஸ்தானில் உள்ள முக்கிய தீவிரவாத முகாம்களை இலக்காக கொண்டு தாக்கியதில், வெறும் எட்டு மணி நேரத்தில் பாகிஸ்தான் தான் நிலை குலைந்தது. அதன் பிறகு தான் பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி மூலம் “போரைக் நிறுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் வந்தது.
எங்களது தாக்குதல் முழுவதுமே பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே இருந்தது என்பதும், துல்லியமான தாக்குதலால் பயங்கரவாதிகள் நிலைகுலைந்தனர் என்றும், பாகிஸ்தானுக்கு அது ஒரு எச்சரிக்கை அளித்தது போல் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இன்னும் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், “ஆபரேஷன் சிந்தூர்” இன்னும் முடியவில்லை என்றும், நமது ராணுவ தளங்களையும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலளிக்க எச்சரிக்கை செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் பாகிஸ்தான் பிரதமரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்தியாவை தாக்குவதற்காக நாங்கள் தயாராக இருந்தோம்; காலை 4 மணிக்கு தொழுகை முடித்துவிட்டு தாக்க நினைத்த நிலையில், அதற்கு முன்பே இந்தியா முக்கிய ராணுவ தளங்களை தாக்கிவிட்டது என்று அவர் தெரிவித்திருந்தார். எனவே, இருவருடைய கருத்துக்களும் ஒரே போல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு குறுகிய நேரத்தில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டதால் தான், வேறு வழியில்லாமல் அவர்கள் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர் என்றும், இந்தியாவும் மனிதாபிமான அடிப்படையில் அந்த பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.