இசைஞானி இளையராஜா என்றாலே இசை ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தான். அந்த வகையில், இன்று அவருடைய பிறந்தநாள் என்பது கூடுதல் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.
இசை துறையை பொறுத்தவரை, இசைஞானியின் சாதனை பிரமிக்கத்தக்கது என்பதும், அவருடைய சாதனைகள் குறித்து ஏற்கனவே பல்லாயிரம் பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றையும் தாண்டி, இளையராஜா என்றாலே இன்னும் எழுதுவதற்கு மிச்சம் நிறைய இருக்கிறது என்பதுதான் பலருடைய கருத்தாக உள்ளது.
பொதுவாக எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அந்த துறையில் செய்யக்கூடிய ஒரு சாதனை என்பது முறியடிக்கக் கூடிய அளவில்தான் இருக்கும். ஆனால், இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் இன்னொரு இசையமைப்பாளரால் முறியடிக்கப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.
பொதுவாக சாதனை செய்பவர்கள் 16 வயதில் இருந்து 25 வயதுக்குள் தங்களுடைய தொடக்கத்தை தொடங்குவார்கள். 16 வயதில் சச்சின் கிரிக்கெட்டை தொடங்கினார். எம்.ஜி.ஆர் 19 வயதிலும், சிவாஜி, ரஜினி போன்றவர்கள் 25 வயதிலும் தங்களுடைய துறையில் அறிமுகமானார்கள்.
ஆனால், இளையராஜா அன்னக்கிளி திரைப்படத்தில் அறிமுகமாகும் போதே அவருக்கு 32 வயது. முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதை அடுத்து, ஐந்தே ஆண்டுகளில் அவர் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார் என்பதும், திரை உலகில் முடிசூடா மன்னராக கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் பயணம் அன்னக்கிளி படத்தில் தொடங்கிய நிலையில், இன்று வரை நிற்கவில்லை என்பதும், இந்த துறையில் அவர் சாதிப்பதற்கு இனிமேல் எதுவும் இல்லை என்றாலும், தொடர்ந்து அவர் ஏதாவது புதுமைகளை செய்து கொண்டே இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளமை பருவத்திலேயே இசை மற்றும் கர்நாடக இசையை முறைப்படி பயின்ற இளையராஜா, இசையமைப்பாளர் ஜி. கே. வெங்கடேசன் இசைக்குழுவில் சில காலம் பணியாற்றினார். அப்போதுதான் அவருக்கு அன்னக்கிளி படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்தில் ஆரம்பித்த அவரது ஜெட் வேகம், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும், ஒரு இயக்குனர் படத்தின் கதை மற்றும் பாடலுக்கான சிச்சுவேஷனை சொன்ன அடுத்த 5 முதல் 10 நிமிடத்தில் பாடல் கம்போசிங்கை தொடங்கிடுவார் என்பதும்,
நினைத்தால் ஒரு மணி நேரத்தில் பாடல் ரெக்கார்டிங் முடித்துவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பின்னணி இசை அமைக்க, தற்போதைய இசையமைப்பாளர்கள் வார கணக்கிலும் மாத கணக்கிலும் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரே இரவில் கூட அவர் ஒரு முழு படத்திற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்த வரலாறும் உள்ளது.
இளையராஜாவின் வெற்றிக்கு முக்கிய காரணம், அவருடைய ஒழுங்குமுறை. தனது ரெக்கார்டிங் தியேட்டருக்கு அதிகாலை 7 மணிக்கு வந்துவிடுவார். இன்று வரை, அவர் சொன்ன நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பாடலையோ, பின்னணி இசையமைக்கும் பணியையோ முடித்து கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
80 வயதுக்கு மேல் ஆகியும், அவர் இன்னும் ஓய்வு இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கு இசையமைக்க நேரம்தான் கிடைக்கவில்லை என்பதை தவிர, ஓய்வெடுக்க நேரம் என்பது அவருக்கே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“இளையராஜா இசை இருந்தால் போதும், அந்த படம் வெற்றி பெற்றுவிடும்” என 70களிலும் 80களிலும் திரையுலகினர் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணிரத்னம், பாக்யராஜ் உள்ளிட்ட பல பிரபல இயக்குனர்களின் படங்களுக்கு, அவர் தான் இசையமைத்திருந்தார்.
ஆனால், அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் அனைவருமே இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து, வெவ்வேறு இசையமைப்பாளர்களை நாடினார்கள் என்பதும் உண்மை.
ஆனால், இளையராஜாவை பிரிந்தபின், ஒரு சில இயக்குனர்கள் படுதோல்வியை அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் பாடல்கள் எந்த அளவுக்கு பிரபலமோ, அதேபோல் அவரது பின்னணி இசையும் பல படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது. முள்ளும் மலரும், உதிரி பூக்கள், முதல் மரியாதை போன்ற படங்கள், பின்னணி இசைக்காக மட்டுமே வெற்றி பெற்றது என்றால் அது மிகையாகாது. இதை அந்தந்த படத்தின் இயக்குனர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
இளையராஜாவுக்கு முன்பும், அவருக்குப் பின்பும் இசை உலகில் எவ்வளவோ பேர் சாதனை செய்தாலும், இளையராஜாவின் சாதனை என்பது தனித்துவமானது. இசை சிம்மாசனம் என்பது அவருக்கே உரியது என்றும், அதில் இன்னொருவரை அமர வைக்க இசை ரசிகர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.