மும்பை தலைமை செயலகம், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாகிஸ்தான் கைவரிசையா?

  மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா அரசின் நிர்வாக தலைமையகம் மந்திராலயா. இந்த கட்டிடத்திற்கு இன்று மாலை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு…

mumbai

 

மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிரா அரசின் நிர்வாக தலைமையகம் மந்திராலயா. இந்த கட்டிடத்திற்கு இன்று மாலை பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மின்னஞ்சலில், “48 மணி நேரத்துக்குள் நகரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட இடம் எதுவும் சொல்லப்படவில்லை. இதையடுத்து, போலீசாரும், பாதுகாப்பு அதிகாரிகளும் களமிறங்கினர்.

பின்னர், மந்திராலயா வளாகத்தில் முழுமையான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டபோதும், சந்தேகத்துக்கிடமான எதுவும் கிடைக்கவில்லை.

இந்த மிரட்டல், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில் வந்துள்ளதால், மும்பை போலீசார் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். நகரத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மின்னஞ்சல் குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் Anti-Terrorism Squadக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மெரீன் டிரைவு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அந்த மின்னஞ்சல் வந்த IP முகவரி மூலம் அனுப்பியவரை கண்டறிய போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது பாகிஸ்தானியர்களின் சதியா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

இதேவேளை, கொல்கத்தா விமான நிலையத்தில் சற்றே பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இம்பால்-மும்பை இண்டிகோ விமானத்தில் பயணிக்க சென்ற பயணி ஒருவர், போர்டிங் ஸ்டேஜில் சோதனை நடக்கும் போது, “என்னிடம் பாம் இருக்கா?” எனக் கேட்டதாக தகவல்.

இது, விமான ஊழியர்களிடம் பாதுகாப்பு சீர்கேடாக தோன்றியதால், அந்த பயணியை உடனடியாக போலீசிடம் ஒப்படைத்தனர்.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்ததாவது, அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த இரண்டு சம்பவங்களும், நாட்டில் தற்போது நிலவும் பதற்றங்களை ஒட்டிக் கொண்டு, பாதுகாப்பு முகாமைத்துவத்தில் எச்சரிக்கையை அதிகரிக்க வைத்துள்ளன.