ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற கொண்டாட்டத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது என்பதும், இதில் 11 உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது என்பதும், கர்நாடக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் வரிசையாக உயர் அதிகாரிகள் தான் பலிகிட ஆக்கப்படுகிறார்கள் என்றும், உண்மையான குற்றவாளிகள் தப்பித்து வருகின்றனர் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வரின் அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜ் என்பவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகி உள்ள நிலையில், அந்த உத்தரவில் காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே நேற்று பெங்களூர் நகர காவல் ஆணையர் தயானந்தா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனுடன், இன்று காவல்துறை தலைவர் ஹேமந்த் என்பவரும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது திடீரென முதல்வரின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, “அவருக்கு ஆதரவாக இருப்போம்” என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில், முன்னாள் பெங்களூரு காவல் ஆணையர்கள் அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். “இது அவசரமான மற்றும் தவறான முடிவு. முழுக்க முழுக்க இந்த சம்பவத்திற்கு துணை முதல்வர் டி. கே. சிவகுமாரே பொறுப்பாளர். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லாத சித்தராமையா அரசு, அதிகாரிகளை பலிகடா ஆக்கி வருகிறது,” என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆன அன்று கூட்ட நெரிசலில் ஒரு பெண் இறந்துவிட்டார் என்பதற்காக அல்லு அர்ஜுனை கைது செய்ய முடிந்த அரசுக்கு, 11 உயிர்கள் பலியான இந்த சம்பவத்தில் டி. கே.சிவகுமாரை கைது செய்ய முடியவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நியாயமான கேள்விக்கு அரசிடம் பதில் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.