ராஜஸ்தான் மாநிலத்தில், காட்டுப்பகுதி அருகிலுள்ள ஒரு கிராமத்தில், தினந்தோறும் ஒரு கரடி வந்து வீட்டுக்குள் புகுந்து பால், தயிர், வெண்ணை மற்றும் சைவ உணவு பொருட்களை மட்டும் சாப்பிட்டு, வீட்டையும் சேதப்படுத்தி செல்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் அந்த கரடியை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பஜோலி என்ற கிராமத்தில் உள்ள மக்கள் சில வாரங்களாக பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு கரடி தினந்தோறும் இரவு நேரத்தில் வந்து வீட்டுக்குள் நுழைந்து, கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தி விட்டு, உள்ளே பால், தயிர், நெய், வெண்ணெய் மற்றும் பிற உணவு பொருட்களை சாப்பிடுவதாகவும், முழுக்க முழுக்க அந்த கரடி சைவம் மட்டுமே சாப்பிடுவதாகவும் புகார் வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு உள்ளூர் மக்கள் புகார் கொடுத்துள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஒரு வீட்டை குறி வைத்து கரடி தாக்குதல் நடத்தி வருவதாகவும், கூண்டு வைத்து பிடிக்க முயன்றும் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஒரு வீடியோவில் கரடி ஒரு வீட்டுக்குள் புகுந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை கவ்விச்சென்ற காட்சி உள்ளது என்றும், அந்த கரடியை நாய்கள் விரட்டிச் செல்லும் காட்சியும் அதில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஊருக்குள் தினந்தோறும் புகுந்து வரும் கரடியை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக கரடி அசைவ உணவையே சாப்பிடும் நிலையில், இந்த ஒரு கரடி வித்தியாசமாக பால், தயிர், வெண்ணையை சுவைத்து ருசி கண்ட பின்னர் அதை மீண்டும் மீண்டும் சுவைப்பதற்காக இந்த கிராமத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது. இது கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.