’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ பாணியில் ஆள்மாறாட்டம்.. அரசு தேர்வில் நடந்த மிகப்பெரிய மோசடி கண்டுபிடிப்பு..!

  கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில், ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் தேர்வு எழுதும் ஆள் மாறாட்ட மோசடி நடக்கும் காட்சிகள் இருக்கும் நிலையில், அதேபோன்று மத்தியப் பிரதேசம் மாநில அரசு தேர்வுகளில்…

 

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தில், ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் தேர்வு எழுதும் ஆள் மாறாட்ட மோசடி நடக்கும் காட்சிகள் இருக்கும் நிலையில், அதேபோன்று மத்தியப் பிரதேசம் மாநில அரசு தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தேர்வு வாரியம் நடத்திய அரசு தேர்வில், மூன்று மாவட்டங்களில் ஆள் மாறாட்ட மோசடி நடந்ததாக 12 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான உறுதியான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2023 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச அரசு பணிக்காக 7 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், இந்த தேர்வு முடிந்து இறுதிக் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பின் போது தான் இந்த மோசடி தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த ராம் என்பவர் சான்றிதழ் பரிசோதனைக்காக சென்றபோது, அவரது ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் வித்தியாசமாக இருந்ததை அடுத்து அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, தன் பெயரில் வேறு ஒருவர் தேர்வு எழுதியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்காக தேர்வு எழுதியவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் இன்னும் சில மாவட்டங்களிலும் இத்தகைய மோசடி நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஒரு மிகப்பெரிய சதி என்றும், இதற்காகவே ஒரு குழு செயல்பட்டு வருவதாகவும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில், ஒரு தேர்வுக்கு தனக்குப் பதிலாக இன்னொருவரை தேர்வு எழுத வைத்திட தேர்வு செய்யப்படுகிறார். அதன் பின், அவரின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்கிறார்கள். எழுத்துத் தேர்வுக்குப் பின், உடல் தகுதி தேர்வுக்கு செல்லும் முன், மீண்டும் ஆதார் விவரங்களை மாற்றிவிடுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனால், இந்த மோசடியை அடையாளம் காண முடியாமல் போய்விடுகிறது. பலர், இத்தகைய மோசடிகளின் மூலம் அரசு பணியில் சேர்ந்திருப்பதால், இம்மாதிரி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

தற்செயலாக, ஒரு விண்ணப்பதாரர் தனது பயோமெட்ரிக் விவரங்களை மீண்டும் மாற்ற மறந்துவிட்டதால், விவரங்களில் முரண்பாடு ஏற்பட்டு, இந்த மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுபோன்று பலர் போலி தேர்வுகள் எழுதி, அரசு பணிகளில் சேர்த்துள்ளதாகவும், இதில் லட்சக்கணக்கான ரூபாய்கள் பேரத்தில் பரிமாறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.