பாகிஸ்தான், பஹல்காம் பிரச்சனை.. பெங்களூரில் முஸ்லீம்களுக்கு வீடு தர மறுக்கப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!

  ஐஐடி சென்னையில் பட்டம் பெற்ற முகம்மது சஞ்சீத் என்ற இளைஞர், தன் முஸ்லிம் அடையாளத்தின் காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் வீடு வாடகைக்கு மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என்று…

bangalore

 

ஐஐடி சென்னையில் பட்டம் பெற்ற முகம்மது சஞ்சீத் என்ற இளைஞர், தன் முஸ்லிம் அடையாளத்தின் காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் வீடு வாடகைக்கு மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது என்று சமீபத்தில் அறிவித்துள்ள சஞ்சீத், இந்தியாவின் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் வீடு தேடி வந்தார்.

இதுகுறித்து அவர் ‘X’ பக்கத்தில் ஒரு 2BHK வீடு தேவை என பரிந்துரைகள் கேட்டார். ஆனால் இரண்டு நாட்களில் அவர் எதிர்பார்த்த நம்பிக்கையான தேடல், ஏமாற்றமாக மாறியது.

புரோக்கர்கள் மூலமாக சுமார் நான்கு இடங்களை பார்த்தேன். ஆனால் ‘மன்னிக்கவும், பாகிஸ்தான், பஹல்காம் தொடர்பான பிரச்சனைகளால் வீட்டின் உரிமையாளர்கள் முஸ்லிம்களூக்கு வீடு தர மறுக்கின்றனர், ’ என்று புரோக்கர் கூறியதாக சஞ்சீத் தனது பதிவில் எழுதியுள்ளார்.

“இந்த பைத்தியக்காரத்தனமெல்லாம் என்ன? பெங்களூருவில் முஸ்லிம்களை வெறுக்கும் மனப்பான்மை இல்லாத பகுதிகள் எது? அப்படி இருக்கிற இடங்களை மையமாக வைத்து தேடவேண்டிய நிலைதான்!” என்றும் பெங்களூருவைவே விட்டு வெளியேறி, துபாய்க்கு போய்விடலாம் என்று இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

சஞ்சீத் அனுபவத்திற்கு பலர் X தளத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர். “சஞ்சீத், நீங்கள் இந்த அனுபவத்தை சந்திக்க வேண்டியதாகிவிட்டது மிகவும் வருத்தமான விஷயம். இது ஏற்க முடியாதது. உங்கள் நிலையை கருத்தில் கொண்டு சில இடங்களை பரிந்துரை செய்கிறேன். க்வீன்ஸ் ரோடு, சிவாஜி நகர், கோரா செக்கண்ட் பிளாக், ரிச்ச்மண்ட், காக்ஸ் டவுன். நான் க்வீன்ஸிலும் கோரா செக்கண்ட் பிளாக்கிலும் தங்கி இருந்தேன். எனது வீட்டு உரிமையாளர்களும் முஸ்லிம்களே. இங்கெல்லாம் பிரச்சனை இருக்காது.”

மற்றொருவர், சஞ்சீதுக்கு தற்காலிகமாக தங்க இடம் வழங்க முன்வந்துள்ளார். “அண்ணா, நான் சமீபத்தில் தான் திருமணம் செய்துகொண்டேன். வீட்டு ஏற்பாடுகளை முடிப்பது எப்படி ஒரு மனஅழுத்தம் என்பதை நன்கே புரிகிறது. இத்துடன் இந்த மாதிரியான பிரச்சனைகளும் வந்துவிட்டால் கஷ்டமே. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் தங்கலாம்,” என்று தெரிவித்தார். மற்றொரு பயனர் “இது மிகவும் அநியாயம். இது உங்கள் மீது நேர்ந்தது வருத்தம்தான்.” என்றார்.

சஞ்சீத் கூறிய இந்த அனுபவம், ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்‌காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட பின்னர், பாகிஸ்தானுடன் ஏற்பட்ட பதற்றநிலையைப் பின்பற்றியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.