பேசாமல் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் கூறியதற்கான விஞ்ஞான விளக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது தெரிந்தால் ரொம்ப ஆச்சரியப்படுவீங்க. நம்ம முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். வாங்க அது என்னன்னு பார்ப்போம்.
மனித முகத்தில் மண்டை ஓட்டின் அதாவது கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை என்கிறது, மருத்துவம். இந்த தொண்டையை மேலும் மூன்று பகுதிகளாக பிரிக்கிறார்கள். அவை: முகத்தோடு இணைந்த தொண்டை, வாயோடு இணைந்த தொண்டை, குரல் வளையோடு இணைந்த தொண்டை.
வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டத்தட்ட ஒரு லெவல் கிராசிங் போன்றது.
சுவாசப் பாதையை சாலை என்று வைத்துக்கொண்டால் உணவுப் பாதைதான் ரெயில்வே பாதை. சாலை எப்போதும் திறந்தே இருக்கும். காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும்போது அதாவது நாம் சாப்பிடும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்ளும். உணவு போனதும் மீண்டும் திறந்து கொள்ளும்.
இதில் எதற்கு கதவு போன்ற அமைப்பு என்றால் உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அப்படி சாப்பிடும்போது சுவாசக் குழாய் திறக்கும்.
சுவாசக் குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி திறக்கும் சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். இதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே தள்ளும். இதைத்தான் புரை ஏறுதல் என்கிறார்கள். மருத்துவத்துறையில் இதை ‘வாட்ச் டாக் மெக்கானிசம்‘ என்று கூறுகிறார்கள்.
சிலருக்கு தூங்கும் போது புரையேறும். அசந்து தூங்கும் போது அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். அதற்கு அதிகாலை எழுதல்,தியானம், யோகா,உடற்பயிற்சிகள் செய்தல்,வழிபாடு பிரார்த்தனைகள் இவைகள்தான் உதவும்….
இப்படி உணவுபாதையையும், சுவாசப் பாதையையும் நமது முன்னோர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து தெளிவு பெற்றதால்தான், சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட சொன்னார்கள்.