ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!

Published:

இரண்டு நடிகர்கள் தனித்தனியாக ஒரே நாளில் ஒரே டைட்டில் கொண்ட திரைப்படத்தில் நடிப்பதாக விளம்பரம் வந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு விளம்பரம் கடந்த 1958ஆம் ஆண்டு வந்தது.

1940ஆம் ஆண்டு பியு சின்னப்பா நடித்த ‘உத்தமபுத்திரன்’ என்ற படத்தை மீண்டும் ரீமேக் செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் முடிவு செய்தார். அந்த படத்திற்காக அவர் முன்னணி நாளிதழில் விளம்பரம் கொடுத்தார். ஆனால் அதே நாளில் தான் அந்த படத்தின் உரிமையை வாங்கிய வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சிவாஜியை வைத்து ‘உத்தமபுத்திரன்’ படத்தை எடுக்க இருப்பதாக இன்னொரு பத்திரிகையில் விளம்பரம் செய்தது.

சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு பத்திரிகையில் ‘உத்தமபுத்திரன்’ என்ற திரைப்படம் எம்ஜிஆர் நடிப்பதாகவும், சிவாஜி நடிப்பதாகவும் தனித்தனியாக விளம்பரம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ‘உத்தமபுத்திரன்’ படத்தில் சிவாஜி நடிப்பதாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டதும் எம்ஜிஆர் பின்வாங்கிக் கொண்டு அந்த படத்தை கைவிட்டார்.

uthamaputhiran

ஆனால் அதே நேரத்தில் ‘உத்தமபுத்திரன்’ படத்திற்கு இணையாக ஒரு இரட்டை வேட படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு அடுத்து சில நாட்களிலேயே ‘நாடோடி மன்னன்’ என்ற படத்தின் அறிவிப்பை எம்ஜிஆர் வெளியிட்டார்.

உத்தமபுத்திரன் திரைப்படம் கடந்த 1958ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. சிவாஜி கணேசன், பத்மினி, ராகினி, எம்.என்.நம்பியார், எம்.கே.ராதா, தங்கவேலு, கண்ணாம்பா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவானது. இந்த படத்தை பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். ஸ்ரீதர் கதை, வசனம் எழுதியிருந்தார்.

பட்ஜெட்டை விட 800 மடங்கு லாபம்.. எம்ஜிஆர் இயக்கிய முதல் திரைப்படம்..! என்ன படம் தெரியுமா?

ஜி.இராமநாதன் இசையில் உருவான இந்த படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றன. குறிப்பாக யாரடி நீ மோகினி என்ற பாடலும், முல்லை மலர் மேலே என்ற பாடலும் இன்றும் பிரபலமாக இருக்கிறது.

uthamaputhiran1

இந்த படத்தில் இரண்டு வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். முதலில் ராணிக்கு ஒரு குழந்தை பிறக்கும். ஆனால் அந்த நாட்டின் மந்திரி சதி செய்து அந்த குழந்தையை கொல்ல சொல்வார். ஆனால் குழந்தையை கொலை செய்ய சென்ற அந்த நபரே அந்த குழந்தையை வளர்ப்பார். பார்த்திபன் என்ற அந்த குழந்தை அனைத்து கலைகளையும் கற்று வீரமாக வளரும்.

இதற்கு அடுத்து ராணிக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அதுதான் விக்ரமன். ஆனால் இந்த குழந்தையை கொலை செய்ய விரும்பாத மந்திரி, கோழையாக வளர்க்க விரும்புவார். அந்தப்புரத்திலேயே முழுக்க முழுக்க இருக்கும் வகையில் விக்ரமன் வளர்வார்.

இந்த நிலையில் வழக்கம்போல் இரட்டை வேட கதையில் வரும் ஆள்மாறாட்டம் நடக்கும். பார்த்திபன் இளவரசராகவும், இளவரசர் சிறையிலும் அடைக்கப்படுவார்கள். அதன் பிறகு மந்திரியின் சதியை பார்த்திபன் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

uthamaputhiran2

இந்த படத்தில் சிவாஜி கணேசன் மிகவும் அருமையாக நடித்தார். அதுமட்டுமின்றி அவர் இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் மூலம் வெளியிட்டதால், இந்த படத்தால் அவருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது. ஊடகங்கள் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தைக் கொடுத்தன. குறிப்பாக சிவாஜி கணேசன் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

பின்னாளில் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ என்ற காமெடி படம், இந்த படத்தின் தழுவலில் காமெடியாக உருவானது. சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த படங்களில் உத்தமபுத்திரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றி அவருக்கு தமிழ் திரை உலகில் ஒரு முக்கிய அந்தஸ்தை கொடுத்தது.

மேலும் உங்களுக்காக...