16 வயதில் திருமணம்.. 4 முதல்வர்களுடன் திரையுலகில் பணி.. 300 படங்களுக்கும் மேல் நடித்த செளகார் ஜானகி..!

Published:

திரை உலகில் 16 வயதில் திருமணமாகி 3 மாத கைக்குழந்தை இருக்கும்போது சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சௌகார் ஜானகி. தமிழ், தெலுங்கு திரை உலகில் பல திரைப்படங்கள் நடித்த அவர் நான்கு முதல்வர்களுடன் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் அவர்களின் முதல் கதாநாயகி சௌகார் ஜானகி தான். கடந்த 1950ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் உருவான ‘சௌகார்’ என்ற திரைப்படத்தில் நடித்ததால் அவருக்கு சௌகார் ஜானகி என்ற பெயர் நீடித்தது. இந்த படத்தின் நாயகன் என்.டி.ராமராவ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாத ஒரே படம்.. ஏவிஎம் – எம்ஜிஆர் இணைந்த முதல் படம்.. ‘அன்பே வா’ வெற்றி பெற்றது எப்படி?

முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய குலக்கொழுந்து என்ற படத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். எனவே என்.டி.ராமராவ், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என நான்கு மாநில முதல்வரிடம் பணிபுரிந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

sowcar janaki2 1

அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் பிரபல நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் உள்ளிட்டவர்களுடனும் அவர் நடித்துள்ளார். பாவேந்தர் பாரதிதாசன் கதை, வசனம் எழுதிய வளையாபதி என்ற படத்தில் நடித்துள்ளார் என்ற பெருமையும் உண்டு.

எம்.ஆர்.ராதா, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், சிவகுமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 91 வயதாகும் நிலையில் இந்த ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு படத்தில் கூட நடித்திருக்கிறார். தமிழில் கடைசியாக அவர் சந்தானம் நடித்த பிஸ்கோத் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

1931ஆம் ஆண்டு சென்னை வானொலி நிலையத்தில் சௌகார் ஜானகி அறிவிப்பாளராக பணியாற்றினார். அவரது அருமையான குரலை கேட்டுதான் அவருக்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர் நடிக்க அனுப்ப மாட்டோம் என்று கூறி திருமணம் செய்து வைத்துவிட்டனர். ஒரே ஆண்டில் குழந்தை பிறந்த நிலையில்தான் குடும்ப வறுமை காரணமாக கணவரிடம் அனுமதி வாங்கி அவர் திரைப்படத்தில் நடித்தார்.

முதல் படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து நாயகிகள் வேடம், முக்கிய வேடங்கள் கிடைத்தது. தமிழில் அவர் அறிமுகமாக காரணம் ஜெமினி கணேசன் தான். அதனால் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி ஆகிய இருவரும் கடைசிவரை சகோதரத்துவத்துடன் பழகி வந்தார்கள்.

sowcar janaki3 1

தமிழில் சௌகார் ஜானகி நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக குமுதம், உயர்ந்த மனிதன், புதிய பறவை, என் கடமை, ஒளிவிளக்கு, மோட்டார் சுந்தரம் பிள்ளை, மாலையிட்ட மங்கை, இரு கோடுகள் காவிய தலைவி ஆகிய படங்களை சொல்லலாம்.

ஒளி விளக்கு திரைப்படத்தில் எம்ஜிஆர் உடல் நலமின்றி இருந்தபோது இறைவா நீ ஆணையிடு என்று சௌகார் ஜானகி நடித்த பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. குறிப்பாக எம்ஜிஆர் உண்மையாகவே உடல் நலமின்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது இந்த பாடல் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

அதேபோல் உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜிக்கு இணையாக நடித்திருப்பார். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இரு கோடுகள் திரைப்படத்தில் ஜெமினியை காதலித்து திருமணம் செய்ய முடியாத நிலையில் மீண்டும் ஜெமினியை சந்திக்கும்போது மிகச்சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தில் ஜெமினி கணேசன் குமாஸ்தாவாகவும், சௌகார் ஜானகி கலெக்டராகவும் நடித்திருப்பார்கள். ஃபைல், லைஃப் என்ற இரண்டு வார்த்தைகளை கொண்டு அவர் பேசும் வசனங்கள் பிரபலமானது.

கே.பாலச்சந்தர் முதல் படத்திலேயே சௌகார் ஜானகிதான் நாயகி. நீர்க்குமிழி என்ற அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதன் பிறகு தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான எதிர்நீச்சல், பாமா விஜயம், தில்லுமுல்லு ஆகிய படங்களில் நடித்தார்.

sowcar janaki1

சௌகார் ஜானகி ஏற்று நடிக்காத வேடமே இல்லை என்று சொல்லலாம். ரொமான்ஸ், சென்டிமென்ட், நகைச்சுவை என எந்த வித நடிப்பையும் அவர் அசால்டாக நடித்து விடுவார். குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவரது படங்களிலும் அவர் முக்கிய இடங்களில் நடித்துள்ளார்.

நடிகை சௌகார் ஜானகி தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக இருந்தார். அவர் திரைப்படத்தில் நடிக்கும் போது சொந்த செலவில் தான் காரில் வருவார். உணவு, காஸ்ட்யூம் என எல்லாமே அவருடைய சொந்த செலவில் பார்த்துக்கொள்வார். தயாரிப்பாளருக்கு எந்தவிதமான செலவும் வைக்க மாட்டார்.

1968ஆம் ஆண்டு அவருடைய கலைச் சேவையை பாராட்டி அறிஞர் அண்ணா கலைமாமணி விருது கொடுத்தார். இரு கோடுகள் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகை விருதும் அவருக்கு கிடைத்தது. 70 ஆண்டுகளுக்கு மேலாக தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். தனது வயதுக்கேற்ற வேடங்களில் நடித்து வருகிறார்.

திரை உலகில் மட்டுமின்றி அவர் தொலைக்காட்சியில் சில தொடர்களில் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஊரறிந்த ரகசியம், பெண் ஆகிய தொடர்களிலும் சன் டிவியில் ஒளிபரப்பான அக்ஷயா என்ற தொடரிலும் அவர் நடித்துள்ளார். சௌகார் ஜானகி இன்றும் தனது வயதுக்கேற்ற வேடம் கிடைத்தால் நடிக்க தயாராக உள்ளார்.

சௌகார் ஜானகிக்கு மூன்று மகள்கள் இருந்தாலும் மூவருமே சினிமா பக்கம் வரவில்லை. ஆனால் அவரது பேத்தி வைஷ்ணவி ஒரு நடிகையாவார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். பாலச்சந்தர் இயக்கத்திலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

நடிகை சௌகார் ஜானகிக்கு அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அதுமட்டுமின்றி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் வழங்கியுள்ளது.

மேலும் உங்களுக்காக...