எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாத ஒரே படம்.. ஏவிஎம் – எம்ஜிஆர் இணைந்த முதல் படம்.. ‘அன்பே வா’ வெற்றி பெற்றது எப்படி?

பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த ஏவிஎம் நிறுவனத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் ஆசைப்படுவார்கள். ஏவிஎம் நிறுவனத்தில் ஒரு படம் நடித்து விட்டால் தங்களுடைய சினிமா வாழ்க்கையே நிறைவு பெற்றது என்று எண்ணிய நடிகர்கள் ஏராளமானோர் உண்டு. ஆனால் ஏவிஎம் நிறுவனமே ஒரு நடிகரை வைத்து படமெடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது என்றால் அது எம்ஜிஆர்தான்.

சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் உள்பட பல நடிகர்களை வைத்து ஏராளமான படங்களை தயாரித்துக் கொண்டிருந்த ஏவிஎம் நிறுவனம் முதல் முறையாக எம்ஜிஆரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. அந்த ஆசையின் விளைவால் உருவான படம் தான் ‘அன்பே வா’.

சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

இந்த படம் எம்ஜிஆர் ஃபார்முலா இல்லாமல் வந்த முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக எம்.ஜி.ஆர் திரைப்படம் என்றால் அவர் ஏழையாக இருப்பார், ஏழைகளுக்காக குரல் கொடுப்பார், பணக்காரராக இருந்தாலும் ஏழைகளிடம் அன்பு செலுத்துவார், வில்லனுடன் மோதுவார் சமுதாய கருத்துக்களை கூறுவார் என பெரும்பாலும் படங்கள் அமையும்.

anbe vaa 3

ஆனால் ‘அன்பே வா’ திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட படமாக உருவானது. எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி ஆகிய இருவரும் மோதலில் அறிமுகமாகி, அதன்பின் ஈகோவால் மாறி மாறி மோதிக்கொண்டே இருப்பார்கள். உள்ளுக்குள் இருவரும் காதலித்தாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறுவார்கள். தங்கள் காதலை வெளிப்படுத்தாமல் ஒருவரை ஒருவர் பழி சொல்லி கொண்டிருக்கும் நிலையில் இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்த ஒரே ஒரு லைன் கதையை வைத்து வில்லன்கள் இல்லாமல் இருவருடைய ஈகோவையே வில்லனாக காட்டப்பட்டு இருக்கும். எம்ஜிஆர் படத்தில் அனேகமாக வில்லனே இல்லாத படம் இதுவாகதான் இருக்கும். இந்த படத்தில் அசோகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தாலும் அவரும் இந்த படத்தில் நல்லவராகத்தான் நடித்திருப்பார்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவி, காமெடிக்கு நாகேஷ், மனோரமா என மிகக் குறைந்த நடிகர்களே இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் சென்னையில் மல்யுத்த வீரர்களின் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்க்க சென்ற இயக்குனர் ஏசி திருலோகசந்தர் அதில் பங்கு கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீரரை அழைத்து வந்து எம்ஜிஆர் உடன் மோத வைத்து ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினார்.

முதலில் இந்த சண்டைக் காட்சி படத்தில் வைப்பதாக எண்ணம் இல்லை. ஆனால் எம்ஜிஆர் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக வலிய வைக்கப்பட்டது தான் இந்த சண்டைக்காட்சி. இந்த சண்டை காட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

anbe vaa 1

அதேபோல் ஒரு திரைப்படம் முடிந்த பிறகு ஒரு முழு பாடல் வைக்கப்பட்டது முதல் முதலாக இந்த படத்தில்தான். ‘அன்பே வா’ என்ற பாடல் படம் முடிந்த பிறகு திரையிடப்படும். அந்த பாடலில் உள்ள நடனம் மற்றும் காட்சிகளை பொறுமையாக படம் முடிந்த பின்னரும் ரசிகர்கள் பார்த்து சென்றார்கள்.

இந்த படத்தின் கதை என்று பார்த்தால் எம்ஜிஆர் ஒரு தொழிலதிபர். செல்வ சீமான், அதிகமான உழைப்பு காரணமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக அவர் சிம்லா செல்வார். அங்கே அவருக்கு சொந்தமான பங்களாவுக்கு சென்றபோது, அவரை யார் என்று தெரியாத அந்த வீட்டின் வேலைக்காரரான நாகேஷ் வாடகை கேட்பார். இருந்தாலும் எம்ஜிஆர், தான் யார் என்பதை சொல்லாமல் வாடகை கொடுப்பார்.

அதுமட்டுமின்றி ஏற்கனவே அந்த வீட்டில் சரோஜாதேவி மற்றும் அவரது குடும்பத்தை நாகேஷ் வாடகைக்கு வைத்திருந்தார் என்பதும் தெரியவரும். அதன் பிறகு எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி ஆகிய இருவருக்கும் ஏற்படும் சின்ன சின்ன செல்லமான சண்டைகள், ஒருசில சீரியஸான சண்டைகள் ஆகிய காட்சிகளைக் கொண்டு படம் நகர்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களை வெளிப்படுத்தி சுபமாக படம் முடியும்.

இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஜாலியான படமாகவும், காமெடி காட்சிகள் அதிகமாக இருந்த படமாகவும் அமைந்தது. குறிப்பாக, எம்ஜிஆர் – நாகேஷ் காமெடி காட்சிகள் அனைத்தும் மிகவும் சூப்பராக இருக்கும். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஒரு காரணம்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்காக ஒன்பது பாடல்களை கம்போஸ் செய்திருப்பார். அதில் ‘அன்பே வா’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘நான் பார்த்ததிலே’, ‘நாடோடி நாடோடி’, ‘புதிய வானம்’, ‘வெட்கமில்லை’, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அனைத்து பாடல்களையும் வாலி எழுதி இருந்தார்.

எம்ஜிஆரால் நஷ்டமடைந்தாரா நடிகர் அசோகன்? பல வருட வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

ஆரூர் தாஸ் அவர்களின் பளிச்சென்ற வசனம், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை, எம்ஜிஆர் மற்றும் சரோஜா தேவியின் கெமிஸ்ட்ரி, நாகேஷின் சரவெடி காமெடி ஆகியவை இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...