புதுச்சேரி கச்சேரி பாடல் உருவானதன் பின்னணி… சுவாரசியம் பகிர்ந்த இளையராஜா..!

தமிழ்சினிமா உலகை நீண்ட காலமாக இசை என்னும் இன்ப வெள்ளத்தால் கட்டிப்போட்டு வருபவர் இசைஞானி இளையராஜா. இப்போது தமிழகம் முழுவதும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கி விட்டார். சென்னை, கோவை, கும்பகோணம், நெல்லை, புதுச்சேரி என…

தமிழ்சினிமா உலகை நீண்ட காலமாக இசை என்னும் இன்ப வெள்ளத்தால் கட்டிப்போட்டு வருபவர் இசைஞானி இளையராஜா. இப்போது தமிழகம் முழுவதும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கி விட்டார். சென்னை, கோவை, கும்பகோணம், நெல்லை, புதுச்சேரி என அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு பெருமை சேர்ப்பது அவரது இசை தான்!

புதுச்சேரியில் கடந்த ஜூன் 14ல் நடந்த கச்சேரியில் இளையராஜா சொன்ன ஒரு சுவாரசியமான தகவல் இது. புதுச்சேரி கச்சேரி என்ற பாடல் உருவான விதத்தைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

சிங்காரவேலன் படத்துல கமல் ஒன் மேன் ஷோ மாதிரி உடம்பு முழுக்க வாத்தியக்கருவிகளைக் கட்டிக் கொண்டு அதை இசைத்தபடி பாட்டு பாட வேண்டும். அப்படி ஒரு கேரக்டர். அதற்கு ஒரு டியூன் போட்டேன். வாலி வருகிறார். ‘என்னய்யா டியூனு’ன்னு கேட்கிறார்.

‘ஜகுஜாங்கு ஜகஜக்க ஜகஜக ஜக ஜக ஜாச்சா… ‘அப்படின்னு சொன்னேன். எப்பவுமே ‘தனனான தானான’ன்னு தான் டியூன் போடுவேன். ஆனா இந்தப் பாட்டுக்கு ‘ஜகுஜாங்கு ஜகஜக்க’ன்னு போட்டேன். வாலியும் என்னடா இது வித்தியாசமா இருக்கேன்னு 6 வகையா பல்லவி எழுதினார்.

நானும் இது சரியா வரலன்னு சொன்னேன். எனக்கு வந்து மெட்டுக்கு ஏத்த மாதிரி கனகச்சிதமா வார்த்தை வந்து பொருந்தணும். அப்படி உட்காரணும்கறதுல ரொம்ப கவனமா இருப்பேன். அப்புறம் அவரும் யோசித்துக்கிட்டே இருந்தாரு. அப்புறம் நானே ஜகுஜாங்கு ஜகஜக்கக்கு ‘புதுச்சேரி கச்சேரி’ன்னும் ஜகஜக்கக்கு ‘எக்கச்சக்க’ன்னு போட்டு ‘புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பாட்டு ஒண்ணு புடிச்சேன்’னு எடுத்து விட அவரும் அப்படியே புடிச்சி பாட்டு முழுக்க எழுதி முடித்தார்.

அப்படி உருவானதுதான் அந்தப் பாடல் என்கிறார் இளையராஜா. இப்போ வரை அந்தப் பாடல் கேட்கும்போது நமக்குள் உற்சாகம் பொங்கி எழும். அது ஒரு துள்ளல் இசைப் பாடல் அல்லவா. அதுவும் ராகதேவனின் இசையில் உருவானது. அந்தத் துள்ளல் இருக்கத்தானே செய்யும்?