அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தில் 272 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த மறுநாள், ஒரு பெண் விமானத்திற்குள் இருந்து ‘ரீல்’ ஒன்றை வெளியிட்டு பொதுமக்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
விபத்துக்கு அடுத்த நாள் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அப்பெண், கிட்டத்தட்ட காலியாக இருந்த விமானத்தில் முகக்கவசம் அணிந்து, இருக்கைகளில் படுத்தவாறு வீடியோ எடுத்தார். “ஏர் இந்தியா போயிங் 787, AI171 விபத்துக்கு அடுத்த நாள்,” என்று குறிப்பிட்ட அந்த வீடியோவில், “நீங்கள் போயிங்கில் பறக்க துணிச்சல் உள்ளவரா?” என்றும், “விமான அறையில் புகை வந்தால் நான் தயாராக இருக்கிறேன்” என்றும் சிரித்த முகத்துடன் அவர் பேசியுள்ளார். இந்தத் துயர சம்பவத்தின் தீவிரத்தை புரிந்துகொள்ளாமல், அவரது இந்த செயல் சமூக வலைதளப் பயனர்களை கோபப்படுத்தியுள்ளது.
“மக்கள் போயிங் விமானங்களை நம்புவார்களா என்று தெரியவில்லை! இந்த ரீலில் உள்ள பெண் போலத்தான் இனி மக்கள் பேசுவார்கள்” என்ற அவரது ரீலின் தலைப்பும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களுக்கு மரியாதையற்ற முறையில் நடந்துகொண்டதாக பலரும் அப்பெண்ணை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
“இந்த வீடியோவில் வேடிக்கையாக என்ன இருக்கிறது? உயிரிழந்தவர்களுக்கு சிறிது மரியாதையாவது கொடுங்கள்,” “கவன ஈர்ப்புக்காக இவ்வளவு தூரம் செல்கிறார்களே,” “சோகமான நிகழ்வுக்கு பிறகும் சிரிப்பதை நம்ப முடியவில்லை,” போன்ற கண்டன கருத்துகள் குவிந்தன.
ஒரு பயனர், “குடும்பங்கள் துயரத்தில் இருக்கும்போது, சமூக வலைத்தள புகழ் தேடுவதற்காக ஒரு சோகத்தை கேலி செய்வது தைரியம் அல்ல; அது வெறுமனே உணர்வற்ற செயல்” என்று சாடினார்.
“உயிர் இழந்தவர்களின் துயரத்தை கண்டு சிரிப்பது நாகரிகமற்ற செயல்,” என பலரும் கோபத்துடன் பதிவிட்டு, இந்தப் பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
https://www.instagram.com/reel/DK45bOpJmA5/?utm_source=ig_web_copy_link