வடகிழக்கு டெல்லியில் கடந்த திங்கட்கிழமை காலை 19 வயதான நேகா என்ற இளம்பெண், தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஒரு அறிமுகமான நபரால் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
நேகா தண்ணீர் பிடிப்பதற்காக மொட்டை மாடிக்குச் சென்றபோது, அவருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாண்டாவைச் சேர்ந்த லியாகத் அலியின் மகன், 26 வயதான தௌஃபிக் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் முடிவில் தௌஃபிக் நேகாவை மாடியில் இருந்து தள்ளிவிட்டதால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காவல்துறையினரின் விசாரணையில் தௌஃபிக் பர்தா அணிந்து வந்த நிலையில், நேகாவுடன் ஏற்பட்ட சிறிய சண்டைக்கு பிறகு, அவரை மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டு தப்பி ஓடியபோது, நேகாவின் தந்தை சம்பவ இடத்திலேயே இருந்திருக்கிறார்.
நேகாவின் தந்தை மேலும் வெளிப்படுத்திய தகவலின்படி, தௌஃபிக் முதலில் நேகாவை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாகவும், அது பலிக்காததால், அவரை மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டு தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காவல்துறையின் ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த நேகாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல் திங்கள்கிழமை காலை 8:30 மணியளவில் கிடைத்ததையடுத்து, காவல்துறை அதிகாரிகள் தௌஃபிக் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் மக்கள் ஆத்திரமடைந்ததால், அப்பகுதியில் நிலைமை பதட்டமாக இருந்தது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட டெல்லி போலீஸ் மற்றும் RAF படைகள் அப்பகுதியில் குவிக்கப்பட்டன. நேகாவின் உடல் பலத்த பாதுகாப்புடன் இறுதி சடங்குகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலையில் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தௌஃபிக் தனிப்படையினரின் முயற்சியால் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.