தமிழ்த்திரை உலகில் வாலிபக்கவிஞர் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் வாலி. இவரது ஆரம்ப கால கடினமான தருணங்கள் எப்படி இருந்தன? அதை மாற்றிய தரமான சம்பவம் என்னன்னு பார்க்கலாமா…
கவிஞர் வாலி பல மேடைகளில் இப்படி சொல்லிருக்காரு. எம்எஸ்.விஸ்வநாதனை சந்திக்கிறதுக்கு முன்னால ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்ல. அவரை சந்திச்சதுக்குப் பின்னால எனக்கு சாப்பிடுறதுக்கே நேரமில்ல. அந்தளவுக்கு திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை வாலிக்கு வாரி வாரி வழங்கியவர் எம்எஸ்வி. அப்படிப்பட்ட எம்எஸ்வி.கிட்ட வாலியை அறிமுகப்படுத்தி வச்ச பெருமை தயாரிப்பாளர் சுலைமான், கதாசிரியர் மாராவையுமேச் சேரும்.
சுலைமான் பத்மா பிலிம்ஸ் என்ற ஒரு திரைப்பட நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்துக்குப் பாட்டு எழுதத் தான் வாலி முதலில் சென்றார். அந்தப் படத்துக்கு இசை அமைத்தவர் கே.வி.மகாதேவன். அவரைப் பொருத்தவரைக்கும் கண்ணதாசன் மேல அவ்ளோ பிடித்தம்.
அதன் காரணமாகவோ என்னவோ வாலி எழுதிய எந்தப் பாட்டும் அவருக்குப் பிடிக்கல. ஒரு இசை அமைப்பாளருக்கு கவிஞரோட பாடல் பிடிக்கலன்னா உடனடியா தயாரிப்பாளர் என்ன செய்வாருன்னா இசை அமைப்பாளருக்குப் பிடித்த கவிஞரை ஒப்பந்தம் செய்வார். ஆனால் அந்தத் தயாரிப்பாளரான சுலைமான் அப்படி செய்யவில்லை.
இவர் ரொம்ப நல்லா பாட்டு எழுதுவார். இதைப் பயன்படுத்துங்கன்னு வாலியோட பாடலுக்கு கேவி.மகாதேவனைக் கட்டாயப்படுத்தி இசை அமைக்க வைத்தார். அதற்குப் பிறகு மாராவும், சுலைமானும் முக்தா பிலிம்ஸ் சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அதனால்தான் ‘இதயத்தில் நீ’ என்ற படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது. வாலியின் வாழ்க்கையையே அது மாற்றியது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.