கவியரசு கண்ணதாசன் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் சில படங்களை தயாரித்துள்ளார் என்பதும் பலரும் அறிந்திறாத உண்மை.
கண்ணதாசன் மொத்தம் ஐந்து திரைப்படங்களை தயாரித்துள்ளார். ‘மாலையிட்ட மங்கை’, ‘சிவகங்கை சீமை’, ‘கவலையில்லாத மனிதன்’, ‘வானம்பாடி’, ‘சுமைதாங்கி’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இதில் ‘கவலை இல்லாத மனிதன்’ தவிர மற்ற படங்கள் எல்லாம் அவருக்கு ஓரளவுக்கு கை கொடுத்தன. ஆனால் கவலை இல்லாத மனிதன் மட்டும்தான் அவருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.
காதல் என்ற வார்த்தை இல்லாமல் கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்கள்.. கேட்டு வாங்கிய எம்ஜிஆர்..!
நான் ‘கவலையில்லாத மனிதன்’ என்ற படம் எடுத்தேன். ஆனால் பல கவலைகளால் பாதிக்கப்பட்டேன் என்று தனக்கே உரிய கேலி மற்றும் நயத்துடன் கண்ணதாசன் ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நாயகன் சந்திரபாபு பல நேரங்களில் படப்பிடிப்புக்கே வராமல் இருந்ததால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் சந்திரபாபு ஒரு பாடலை பாடிய போதிலும் அவரது பெயர் பாடகர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. அதேபோல் இந்த படத்திற்கு கதை, வசனம் எழுதி தயாரித்த கண்ணதாசனின் பெயர் கூட டைட்டிலில் இடம் பெறவில்லை என்பது ஆச்சரியம் கலந்த வருத்தம்.
கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சந்திரபாபு நாயகனாக நடித்தார். காமெடி மட்டுமின்றி சீரியஸாகவும் அவரது கேரக்டர் அமைக்கப்பட்டு இருந்தது. எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோருடன் கண்ணதாசன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
பணக்கார பாலையாவின் மகன்கள்தான் எம்.ஆர்.ராதா மற்றும் சந்திரபாபு. இன்னொரு பக்கம் டி.கே.பகவதி ஒரு பணக்காரர், அவருடைய மகள் எம்.என்.ராஜம். மது, மாது என கெட்ட பழக்கங்களில் இருக்கும் எம்.ஆர்.ராதா ராஜசுலோசனாவை காதலித்து அவரை ஏமாற்றி விடுவார். அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டு வீட்டில் இருந்து துரத்தி விடுவார்.
இந்த நிலையில் சந்திரபாபு சமத்துவ சிந்தனைகளுடனும், ஜாதி பாகுபாடு பார்க்காத புரட்சியாளராகவும் இருப்பார். அவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் ஏற்படும் நட்பு பின்னர் காதலாக மலரும்.
இந்த நிலையில் அப்பா வாங்கிய கடனுக்காக வீட்டை இழந்து அனாதையாக நிற்பார் டி.ஆர்.மகாலிங்கம். டி.கே.பகவதியின் மகள் எம்.என்.ராஜம் அவருக்கு அடைக்கலம் கொடுத்து உதவுவார். இருவருக்கும் காதல் ஏற்படும்.
இந்த நிலையில் எம்.ஆர்.ராதாவால் ஏமாற்றப்பட்ட ராஜசுலோசனா எங்கு செல்வது என்று தெரியாமல் ஒருமுறை தாய்மாமன் திருமணத்திற்கு வரும் போது சந்திரபாபு அவரை சந்தித்து அடைக்கலம் கொடுப்பார். கடன் வாங்கி உல்லாசமாக திரிந்த எம்.ஆர்.ராதாவால் பாலையாவுக்கும் சிக்கல் ஏற்படும். வீடு, வாசல் என அனைத்தையும் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்திருப்பார்.
இந்த நிலையில்தான் அண்ணன் செய்த துரோகத்தை சந்திரபாபு அறிந்து கொண்ட நிலையில், திடீரென 5 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு ஒன்று குழந்தை பெயரில் வாங்கிய நிலையில் பரிசு விழுந்திருக்கும். இந்த நிலையில் இந்த பரிசு பணத்தை வைத்து சந்திரபாபு அனைத்து பிரச்சனைகளையும் எப்படி தீர்ப்பார், இந்த லாட்டரி சீட்டு பணத்தை அடைய எம்.ஆர்.ராதா செய்யும் சூழ்ச்சிகளை எப்படி முறியடிப்பார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
1960ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் நன்றாக இருந்தாலும் ரசிகர்கள் மனதை கவரவில்லை. கண்ணதாசன் இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் தோன்றி, ‘கவலை இல்லாமல் வாழ்ந்து விட்டீர்கள், கல்லூரி காலத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை கவலையில்லாமல் அமையட்டும்’ என்று ஒரு கல்லூரி விழாவில் பேசும் காட்சியும் உண்டு.
சந்திரபாபு பிரமாதமாக நடித்திருப்பார். காமெடி காட்சியைவிட சென்டிமென்ட் காட்சிகள் இவருக்கு அதிகம் என்பதால் அதிலும் அசத்தியிருப்பார். டி.எஸ்.பாலையா, ராஜசுலோசனா, எம்.என்.ராஜன், விஜயலட்சுமி, எம்.ஆர்.ராதா ஆகியோரும் தங்கள் நடிப்பை சிறப்பாக கொடுத்து இருப்பார்கள்.
படம் விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக நகராது என்பதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸாக இருந்தது. ஆனாலும் கண்ணதாசனின் வசனம் மற்றும் பாடல்கள் எல்லோரையும் கவனிக்க வைத்தது. கே.சங்கர் இயக்கத்தில் விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் இந்த படம் உருவானது. ‘கவலையில்லாத மனிதன்’, ‘நான் தெய்வமா நீ தெய்வமா’, ‘காட்டில் மரம்’, ‘பெண் பார்க்க மாப்பிள்ளை’, ‘பிறக்கும்போதும் அழுகின்றான்’, ‘சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கண்ணதாசனுக்கு இந்த படம் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு அவர் இரண்டு படங்கள் தயாரித்து அந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தார்.