உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக்லைஃப்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான நிலையில், படம் பார்த்தவுடன் அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட பூர்த்தியாகவில்லை என்ற கவலை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
கமல்–மணிரத்னம் கூட்டணி என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிலும் சிம்பு மற்றும் த்ரிஷா இணைந்த பின்னர், இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்துக்குச் சென்றது. அதுமட்டுமின்றி, ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதால், இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் கூறப்பட்டது.
இந்த படத்தின் கதை டெல்லியில் இருந்து ஆரம்பமாகிறது. கமல்ஹாசன், நாசர், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் வில்லன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை போலீசார் சுற்றி வளைத்துக் கொள்கின்றனர். அப்போது, அதிலிருந்து தப்பும் கமல் ஒரு சிறுவனை தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அந்த சிறுவன்தான் சிலம்பரசன்.
அது மட்டுமின்றி, கமல்ஹாசனை வில்லன் கும்பல்கள் பலமுறை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், அனைத்து முறைகளிலும் தப்பும் கமல், தன்னை கொல்ல முயற்சித்தவர்களை தேடி தேடி பழி வாங்குகிறார். இந்த நிலையில், திடீரென கமல்ஹாசனுக்கும் சிம்புவுக்கும் இடையே அதிகார போட்டி வருகிறது. அதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதும், படத்தின் இன்னொரு அம்சம்.
முதல் காட்சியிலேயே கமல் தன்னை நடிப்பில் நிரூபித்த நிலையில், இனி வரும் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால், மணிரத்னத்தின் திரைக்கதை சொதப்பலாக இருந்தது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அரதப்பழசான கதை, எமோஷனல் இல்லாத காட்சிகள், கொஞ்சம் நாயகன், கொஞ்சம் செக்கச் சிவந்த வானம், லாஜிக் ஓட்டைகள் உள்ளிட்ட பல நெகட்டிவ் அம்சங்கள் இந்த படத்தில் உள்ளன.
கமல்ஹாசன் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து, மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருடைய நடிப்பில் ஒரு சதவீதம் கூட குறை சொல்ல முடியாது. ஆனால், அவர் மணிரத்னத்தின் திரைக்கதையை கவனித்தாரா என்று தெரியவில்லை. வெறும் நடிப்பும் வயதும் ஒரு படத்தை தாங்கி விடும் என்றால், அது சுத்தமாக முடியாது. ஒரு படத்தின் முதுகெலும்பே திரைக்கதை தான். அதில் மிகப்பெரிய ஓட்டை இருக்கும் நிலையில், கமல்ஹாசனின் நடிப்பும் வீணாகிவிட்டது.
அதேபோல், சிம்பு, திரிஷா ஆகியோரின் நடிப்பும் ஓகே என்றாலும், அவர்களது கதாபாத்திரங்கள் வலுவாக உருவாக்கப்படவில்லை என்பது பெரும் சோகம். கமல்ஹாசன் மற்றும் திரிஷாவின் காதல் காட்சிகள் நன்றாக இருந்தன. கிளைமாக்ஸில் கமல்ஹாசனுடன் சிம்புவின் ஆக்ஷன் காட்சிகளும் ஓகே ரகமாக இருந்தன.
கமல்ஹாசன், சிம்பு, திரிஷா தவிர மற்ற யாருடைய கதாபாத்திரங்களும் ஒழுங்காக உருவாக்கப்படவில்லை. இந்த படத்தின் ஒரே சிறப்ப அம்சம் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை. ஆனால் அவை அனைத்தும் வீணடிக்கப்பட்டது போல உள்ளது. குறிப்பாக “முத்த மழை ” மற்றும் “விண்வெளி நாயகா” பாடல்கள் படத்தில் இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி.
ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக கார் சேஸிங் காட்சிகளை மிக அபாரமாக படமாக்கியிருக்கிறார்.
மணிரத்னம் மிகச் சிறந்த இயக்குனர், கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இருவருமே தங்களது மிகச் சிறந்த படைப்பை உருவாக்க தவறியுள்ளார்கள் என்பதுதான் பெரும் வருத்தம்.