விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’துப்பாக்கி’ திரைப்படத்தில் தான் முதலில் ரசிகர்கள் “ஸ்லீப்பர் செல்” என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டார்கள். தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக இணைந்து, சாதாரணமாக வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்தால் உடனே செயல்களில் இறங்குவார்கள். அவர்கள் தான் ஸ்லீப்பர் செல்கள் என்று அழைக்கப்பட்டு வந்தார்கள்.
அப்படித்தான் பாகிஸ்தானின் ISI ஏற்பாடு செய்த “ஸ்லீப்பர் செல்” இந்தியா முழுவதும் பரவி இருந்த நிலையில், தற்போது எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த ஸ்லீப்பர் செல்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முதன்முதலாக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் அவருக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது என்றும், இந்தியா பற்றிய பல முக்கிய தகவல்களை அவர் பரிமாறி இருப்பதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து, டெல்லியில் உள்ள ஹசீன் மற்றும் காசிம் ஆகிய இரண்டு சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று ஹனிடிராப்பிங் செயல்களில் ஈடுபட்டதாகவும் உறுதி செய்யப்பட்டது. மேலும், பஞ்சாப் யூடியூபர் ஜஸ்பீர் சிங் ஒரு ஸ்லீப்பர் செல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் தூதரான டானிஸ் என்பவரிடம் நெருக்கமான பழக்கம் வைத்திருந்ததாகவும், அதுமட்டுமின்றி இந்திய சிம் கார்டு எண்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்பட இவர் உதவி செய்ததாகவும் கூறப்பட்டது.
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு சந்தேகத்திற்கிடமான தொலைபேசி எண்கள் பல கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொருவராக மாட்டிக் கொண்டுள்ளனர். இவர்கள் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, குஜராத், அசாம் போன்ற மாநிலங்களில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், இந்திய சிம் கார்டுகளை பயன்படுத்தி ஸ்லீப்பர் செல்களையும் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களையும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களையும் பதிவு செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சந்தேகம் வராத வகையில் இந்த ஸ்லீப்பர் செல்கள் இயங்கி வந்ததாகவும், தற்போது காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பல ஸ்லீப்பர் செல்கள் மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவி செய்த ஒருவரை கூட விட்டு வைக்க மாட்டோம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.