திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் நாயகன் அந்த பெண்ணை பிடித்து விட்டது என்று சொல்ல, வரதட்சணை பிரச்சனையால் திருமணம் நின்றுவிட, அதே பெண்ணை நாயகன் எப்படி கைபிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.
இந்த கதையில் தமிழ் சினிமா தோன்றியதில் இருந்து ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கிறது என்றாலும், அந்த படங்களை எல்லாம் தாண்டி பாக்யராஜின் வலுவான திரைக்கதையால் வெற்றி பெற்றது என்றால் அது ‘தூறல் நின்னு போச்சு’ திரைப்படம்தான்.
ரஜினி, கமல் படங்களில் நடிப்பு.. அரசியலிலும் வெற்றி.. ‘வாரிசு’ நடிகையின் வாழ்க்கைப்பாதை..!
முதல் காட்சியிலேயே நாயகியை பெண் பார்க்க வரும் பாக்யராஜ், சில நகைச்சுவை காட்சிகளுடன் பெண் பார்க்கும் படலம் முடியும். இந்த நிலையில் பாக்யராஜுக்கு பெண்ணை பிடித்து விட சம்பந்தம் பேசப்படுகிறது. அப்போது வரதட்சணை பிரச்சனை காரணமாக திருமணம் நின்றுவிட, அதனை அடுத்து பாக்யராஜ் அந்த ஊருக்கே குடி வந்து அந்த பெண்ணை எப்படி அவருடைய தந்தையின் சம்மதத்துடன் திருமணம் செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
பாக்யராஜின் வலுவான திரைக்கதையில் உருவான இந்த படம் ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டர் என்று கூறப்பட்ட மதுரை தங்கம் தியேட்டரில் 300 நாட்கள் ஓடியது. இந்த தியேட்டரில் 300 நாட்கள் ஓடியது என்றால் சாதாரண தியேட்டரில் 600 நாட்கள் ஓடியதற்கு சமம். அந்த அளவுக்கு இந்த தியேட்டர் மிகப் பெரியது.
இந்த திரைப்படம் கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் 100 நாட்களை கடந்து ஓடியது. இந்த படத்தை 80களில் பெரும்பாலனோர் பார்த்திருப்பார்கள்.
அப்பாவியான நாயகி, ஓரளவு புத்திசாலித்தனமான நாயகன் என கதை வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த படத்தில் நாயகன், நாயகியை இணைத்து வைக்க போராடும் குணச்சித்திர கேரக்டரில் நம்பியார் நடித்திருப்பார். நம்பியாரை இதுவரை வில்லனாக மட்டுமே பார்த்திருந்தவர்கள் இந்த படத்தில் அவருடைய வித்தியாசமான குணச்சித்திர நடிப்பை பார்த்திருப்பார்கள்.
பாரதிராஜா படத்தில் அறிமுகமாகி ஒரு நாட்டிற்கே பிரதமரான நடிகை.. ஒரு அழகான காதலும் உண்டு..!
நடிகை சுலக்சனாவுக்கு இந்த படத்தில்தான் நல்ல பெயர் கிடைத்தது. ஒரு முதலிரவில் கணவன் மனைவிக்கு என்ன நடக்கும் என்று கூட தெரியாமல் அப்பாவியாக இருக்கும் காட்சிகள் எல்லாம் நகைச்சுவையின் உச்சமாக இருக்கும்.
ஆங்காங்கே நகைச்சுவை காட்சிகள், சரியான இடங்களில் சண்டை காட்சிகள், இளையராஜாவின் இனிமையான பாடல்கள், பாக்யராஜின் வலுவான திரைக்கதை, எதிர்பாராத கிளைமாக்ஸ் என படத்தின் அத்தனை அம்சங்களும் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
குறிப்பாக கிளைமாக்ஸில் நாயகியின் தந்தை செந்தாமரை தனது உறவினர் ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்ய முடிவு செய்வார். அப்போது நம்பியார் அந்த மணமகனுக்கு ஒரு நோய் இருக்கிறது என்று சொல்லியும் கேளாமல் அவர் திருமண ஏற்பாடு செய்வார். அப்போது ஏற்படும் எதிர்பாராத திருப்பம் நிச்சயம் அந்த காலத்தில் எந்த ஒரு ரசிகரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
‘முந்தானை முடிச்சு’ படத்திற்கு முன்பே 7 படங்கள் நடித்திருக்கிறாரா ஊர்வசி..?
மொத்தத்தில் கே.பாக்யராஜ் இந்தியாவின் தலை சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று புகழப்படுவதற்கு சரியான உதாரணம் தான் இந்த தூறல் நின்னு போச்சு. கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகிய போதிலும் தற்போது தொலைக்காட்சியில் இந்த படத்தை ஒளிபரப்பினால் முழுமையாக பார்க்காமல் யாரும் விடமாட்டார்கள்.