உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்கின் தந்தை, எரோல் மக்ஸ் தற்போது, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில், தனது மகன் எலான் மஸ்க் சீக்கிரம் இந்தியா வரவேண்டும் என்றும், அதுமட்டுமின்றி நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அவருக்கு மன அமைதி கிடைக்கும் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் எலான் மஸ்கின் தந்தை, எரோல் மஸ்க், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், அவர் பல்வேறு வணிக கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், அவர் அயோத்தி ராமர் கோவில் உள்பட சில ஆன்மீக இடங்களுக்கும் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எரோல் “நான் என் மகனை பற்றி பேசும்போதெல்லாம் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்” என்று அறிவுரை கூறி வருகிறேன். “அவனுக்கு இப்போது 53 வயது ஆகிறது. ஆனால் 30 வயது இளைஞர் போல் தற்போது சுறுசுறுப்பாக இருக்கிறான். மகனுக்கு நான் ஒரே ஒரு அறிவுரை சொல்ல வேண்டும் என்றால், ‘இந்தியாவுக்கு வரவேண்டும்; ரெஸ்ட் எடுக்க வேண்டும்’ என்பதுதான்,” என்றார்.
ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. “அவர் இன்னும் இந்தியா வராதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இந்தியா வரவில்லை என்றால் அது மிகப்பெரிய தவறு,” என்று தெரிவித்தார். மேலும், “எலான் மஸ்க் ஓய்வு எடுக்க வேண்டும். அப்போதுதான் மனம் ரிலாக்ஸ் ஆகும்,” என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தியா வரும்போது டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் திட்டங்களில் இந்தியர்கள் முதலீடு செய்ய வாய்ப்பு அதிகம் என்றும், இந்தியாவில் ஸ்டார்லிங்க் விரைவில் அறிமுகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தனது மகனின் ‘நியூராலிங்க்’ நிறுவனம் குறித்து அவர் பெருமையாக பேசினார். மனித மூளை மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு இடையே உள்ள தொடர்பை உருவாக்கும் இந்த தொழில்நுட்பம், நினைவாற்றல் மேம்பாடு, நரம்பியல் நோய் சிகிச்சை ஆகியவற்றில் மேம்பாடு அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிறுவனம் தன்னை ஆச்சரியப்பட வைத்ததாகவும், பார்வையற்றவர்களுக்கு பார்வை கிடைக்கும் உள்பட பல நன்மைகள் இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும் என்றும், மனித குலத்துக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா குறித்து அவர் கூறிய போது, “இந்தியா ஒரு மிகச் சிறந்த பொருளாதார நாடு. இனிமேல் இந்தியாவுக்கு நல்ல காலம் தான்,” என்றும் தெரிவித்தார்.