பகுத்தறிவு பேசும் அண்ணாவுக்கே விபூதி அடிக்க தைரியம் உள்ள நடிகர்.. காலம் கடந்தும் பெயர் எடுத்த பின்னணி..

By Bala Siva

Published:

அறிஞர் அண்ணா பகுத்தறிவாதியாக கருதப்படும் நிலையில் அவருக்கே நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கக் கூடிய தைரியம் யாருக்காவது இருந்ததா என கேட்டால் நிச்சயம் ஒருவரை கைகாட்டி விடலாம். தமிழ் திரை உலகில் கடந்த 1940 களிலிருந்து 60கள் வரை ஏராளமான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து பெயர் எடுத்தவர் தான் நடிகர் கே சாரங்கபாணி.

இவர் கும்பகோணம் மாவட்டத்தில் 1904 ஆம் ஆண்டு பிறந்தார். ஏழு வயதாக இருக்கும் போது அவருக்கு படிப்பின் மீது நாட்டம் இல்லாமல் இசை மற்றும் நாடகத்தின் மீது நாட்டம் இருந்தது. இதனையடுத்து அவர் சிறுவயதிலேயே ஜெகநாத ஐயரின் கம்பெனியில் சேர்ந்து நடிப்பு, பாட்டு, இசை மற்றும் நடனம் ஆகியவற்றை முறையாக கற்றுக் கொண்டார்.

அதன் பிறகு ஜெகநாத ஐயரின் பல நாடகங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் அந்த கம்பெனியிலிருந்து விலகி வேறு கம்பெனியில் சேர்ந்த அவருக்கு ஏராளமான நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் தான், நடிகர் கே. சாரங்கபாணிக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கடந்த 1935 ஆம் ஆண்டு ’பக்த ராமதாஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு சபாபதி, என் மனைவி, நாம் இருவர் உள்பட பல படங்களில் நடித்தார். ஏவிஎம் தயாரித்த நாம் இருவர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருந்தது.

sarangabani

இதனை அடுத்து வேதாள உலகம், வாழ்க்கை, கன்னியின் காதல், மோகனசுந்தரம் போன்ற படங்களில் நடித்தார். நடிகர் சாரங்கபாணி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ரம்பையின் காதல், அந்தமான் கைதி போன்ற படங்களில் ஹீரோவாகவும் சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

1935 ஆம் ஆண்டு வரை ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை இவர் பல திரைப்படங்களில் நடித்தார். ’தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தில் அவர் சக்திவேல் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு அவர் வேறு தமிழ் படங்களில் நடித்ததாக தெரியவில்லை.

நடிகர் சாரங்கபாணி காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக இருந்தாலும் அவருக்கு பல கட்சிகளில் உள்ள தலைவர்களுடன் நட்பு உண்டு. குறிப்பாக அறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை தினமும் சென்று பார்த்தவர்களில் ஒருவர் சாரங்கபாணி. அவருக்காகவே கோவில் கோவிலாக சென்று பூஜை செய்து குங்குமம் மற்றும் விபூதி பிரசாதத்தை அண்ணாவின் நெற்றியில் வைப்பார்.

அண்ணா ஒரு பகுத்தறிவாளராக இருந்தாலும் சாரங்கபாணி மீது கொண்ட நட்பின் அடிப்படையில் அந்த விபூதி, குங்குமத்தை அவர் அழிக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த அளவுக்கு அறிஞர் அண்ணாவுக்கும் சாரங்கபாணி அவர்களுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சாரங்கபாணி 1984 ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக காலமானார். இப்போதும் கூட பழைய திரைப்படங்களை பார்க்கும்போது சாரங்கபாணியின் காமெடி நடிப்பை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கும் ரசிகர்களும் ஏராளமாக உள்ளனர்.

மேலும் உங்களுக்காக...