எம்ஜிஆர் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்த நடிகை லதா, 10ஆம் வகுப்பு படிக்கும் போது எம்ஜிஆரின் படத்தில் முதல் முதலாக நடிக்க தொடங்கி அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல திரையுலக பிரபலங்களுடன் நடித்தார். ரஜினியுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் அவர் சிங்கப்பூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் லதாவின் மறுபக்கம் குறித்து தற்போது பார்ப்போம்.
நடிகை லதா சிறுவயதிலேயே நடனம் நாட்டியம் என்று ஆர்வத்தில் இருந்த நிலையில் அவர் 10ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளி அளவில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் எம்ஜிஆர் கண்ணில் பட அவர் தனது ’உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினார்.
எம்ஜிஆர், சிவாஜியுடன் திரையுலகில் உச்சம்.. திடீரென சிஏ ஆடிட்டராகி லட்சக்கணக்கில் சம்பாதித்த நடிகை..!
இதனை அடுத்து எம்.ஜி.ஆரின் சார்பில் ஆர்.எஸ்.மனோகர் லதாவின் அம்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் லதாவின் அம்மாவோ தாங்கள் ராஜ பரம்பரை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சினிமாவில் நடிப்பதை நாங்கள் விரும்ப மாட்டோம் என்றும் கூறினார். அது மட்டும் இன்றி லதா தற்போது 10ஆம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவருக்கு 16 வயது தான் ஆகிறது என்றும் எனவே இந்த வயதில் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
உங்கள் கருத்தை நீங்கள் நேரடியாக எம்.ஜி.ஆர் இடத்தில் தெரிவித்துக் கொள்ளுங்கள் என்று ஆர்.எஸ். மனோகர் கூற அடுத்த நாள் எம்ஜிஆர் அலுவலகத்திற்கு லதா மற்றும் அவரது தாயார் சென்றனர். அவர்களை அன்புடன் வரவேற்ற எம்ஜிஆர், உங்கள் ராஜ பரம்பரைக்கு எந்த விதமான இழுக்கும் வராமல் நான் பார்த்துக் கொள்வேன் என்றும் லதாவை முழுமையாக பாதுகாப்பது என்னுடைய பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து லதாவின் அம்மா தனது மகளை சினிமாவில் நடிக்க சம்மதம் தெரிவித்த நிலையில் 5 வருடம் எம்ஜிஆர் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனை அடுத்து எம்.ஜி.ஆரின் நிறுவனம் லதாவுக்கு நடிப்பு பயிற்சி, நடன பயிற்சி, வசனம் பேசும் பயிற்சி கொடுத்தது என்பதும் அதன் பிறகு எம்ஜிஆரின் ’உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அபூர்வ ராகங்கள்.. சிக்கலான கதையை சிறப்பாக கையாண்ட கே.பாலச்சந்தர்!
அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து அவர் எம்ஜிஆரின் அடுத்தடுத்த படங்களில் லதா நடித்தார். எம்ஜிஆரின் ’நேற்று இன்று நாளை’ ’சிரித்து வாழ வேண்டும்’ ’உரிமை குரல்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். 5 வருட ஒப்பந்தம் இருந்தாலும் எம்ஜிஆரிடம் அனுமதி பெற்று சில வெளிப்படங்களிலும் நடித்தார். அதில் ஒன்று தான் சிவாஜியுடன் நடித்த ‘சிவகாமியின் செல்வன்’.
இதனை அடுத்து மீண்டும் எம்ஜிஆர் உடன் ’பல்லாண்டு வாழ்க’, ’நாளை நமதே’, ’நினைத்ததை முடிப்பவன்’, ’நீதிக்கு தலைவணங்கு’, ’உழைக்கும் கரங்கள்’, ’நவரத்தினம்’ போன்ற படங்களில் நடித்தார். 1978ஆம் ஆண்டு எம்ஜிஆரின் கடைசி திரைப்படமான ’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற திரைப்படத்திலும் லதா தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் அரசியலில் இறங்கியவுடன் லதா மற்ற கதாநாயகர்களுடன் நடிக்க தொடங்கினார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகுமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
இந்த நிலையில் 80களில் புதுப்புது கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் வந்ததால் லதாவுக்கு சினிமா வாய்ப்பு குறைந்ததால் அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடித்தது போதும் என்று முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் 1983ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் லதா தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். தற்போது கூட அவர் மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இந்த தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.