700 படங்களுக்கும் மேல் நடித்த வில்லன் நடிகர்.. 2 படத்தை தயாரித்து பெரும் நஷ்டம்.. எஸ்.வி ராமதாஸ் திரைப்பயணம்..!

By Bala Siva

Published:

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், அர்ஜூன் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் நடிகர் எஸ்.வி ராமதாஸ். கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேல் நடித்த இவர் கஷ்டப்பட்டு பல ஆண்டுகளாக சேர்த்த பணத்தை வைத்து இரண்டு படங்கள் தயாரித்து மொத்த பணத்தையும் இழந்ததாக கூறப்பட்டது.

ஆந்திராவைச் சேர்ந்த இவர் சிறுவயதிலேயே பள்ளி படிப்பை அங்கு முடித்த பின்னர் சென்னைக்கு கல்லூரி படிப்புக்காக வந்தார். கல்லூரியில் படித்துக் கொண்டே அவர் கலை நிகழ்ச்சிகள், நாடகம் போன்றவற்றில் நடித்துக் கொண்டிருந்தார். இதனை அடுத்து பிஏ படித்து முடித்த அவர் சென்னை துறைமுகத்தில் பணியாற்றினார்.

துறைமுகத்தில் பணி புரிந்து கொண்டே அவர் நாடகங்களின் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நடிகர் ஆர்எஸ் மனோகர் அறிமுகம் கிடைத்தது. அவரது நாடகத்திலும் அவர் நடித்தார். குறிப்பாக ஆர் எஸ் மனோகர் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான இலங்கைஸ்வரன் என்ற நாடகத்தில் ராவணனாக ஆர் எஸ் மனோகர் நடிக்க, ராமன் வேடத்தில் எஸ்வி ராமதாஸ் நடித்தார்.

சிவாஜியை விட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கிய எம்.ஜி.ஆர்! என்ன காரணம் தெரியுமா?

images 38

இந்த நிலையில் தான் இந்த நாடகத்தை பார்க்க வந்த இயக்குனர் ராமன் என்பவர் தான் இயக்கிக் கொண்டிருந்த கொஞ்சும் சலங்கை என்ற திரைப்படத்தில் அவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார். இந்த படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு அவர் பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தார்.

எம்ஜிஆருடன் ஆனந்த ஜோதி, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, குடியிருந்த கோயில் போன்ற படங்களிலும் அதேபோல் சிவாஜி கணேசன் உடன் கர்ணன், புதிய பறவை, லட்சுமி கல்யாணம், திருடன், விளையாட்டுப்பிள்ளை, ராமன் எத்தனை ராமனடி, பாரத விலாஸ், எங்கள் தங்க ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

அதேபோல் அவர் ஜெமினி கணேசன் நடித்த சில படங்களிலும் முத்துராமன் நடித்த பல படங்களில் நடித்தார். கமல்ஹாசன் ரஜினிகாந்த் படங்களிலும் நடித்த அவர் சரத்குமார் நாயகனாக நடித்த மூவேந்தர் என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அந்த படத்தில் அவர் சரத்குமார் அப்பாவாகவும் நம்பியார் மகனாகவும் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 1984 ஆம் ஆண்டு அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைந்த நிலையில் சொந்த பாடம் எடுக்க முடிவு செய்தார். அப்போது அவர் சேவல் கூவுகிறது, நியாயம் பிறக்கிறது ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்தார். அந்த படங்களில் அவரே முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த நிலையில் தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக கலர் படங்களுக்கு மாறியது. ஆனால் எஸ்.வி ராமதாஸ் இந்த இரண்டு படங்களையுமே கருப்பு வெள்ளை படமாக எடுத்ததால் விநியோகிஸ்தர்கள் வாங்க முன்வரவில்லை. ஒரு சில விநியோகஸ்தர் வாங்க முன் வந்தாலும் திரையரங்க உரிமையாளர்கள் இனிமேல் கருப்பு வெள்ளை படங்கள் மக்கள் மத்தியில் எடுப்படாது என்று வாங்கவில்லை. இதனால் இந்த இரண்டு படங்களுமே அவர் கடைசி வரை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதாக கூறப்பட்டது.

எம்ஜிஆர் அறிமுகமான படத்தில் அறிமுகம்.. 1000 படங்களுக்கும் மேல் நடித்த தங்கவேலுவின் கதை..!

images 37

சிறு வயதிலிருந்து சினிமாவில் சம்பாதித்த ஒட்டுமொத்த பணத்தையும் இந்த இரண்டு படங்களில் அவர் முதலீடு செய்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்  திரையுலகில் இருந்து விலகினார் என்றும் சொல்லலாம்.

இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் நடித்த ’அபிமன்யு’ என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். அந்த படத்தில் அவருக்கு ஒரு சில காட்சிகள் என்றாலும் அவருக்கு அதன் பிறகு சில வாய்ப்புகள் கிடைத்தது. சிவாஜி முரளி நடித்த என் ஆசை ராசாவே, பார்த்திபனின் ஹவுஸ்புல், விரலுக்கேத்த வீக்கம் ஆகிய படங்களில் நடித்தார். இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் உருவான முதல்வன் திரைப்படத்தில் அமைச்சராக கேரக்டரில் நடித்தார்.

இந்த நிலையில் தான் அவருக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டது. இருப்பினும் அவர் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாத கஷ்டப்பட்டபோது நாகேஷ், மனோரமா உள்ளிட்டோர் அவருக்கு உதவி செய்தனர். எஸ்.வி.ராமதாஸ் அவர்களுக்கு உதவி தேவை என்பதை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா கேள்விப்பட்டு அதிமுக சார்பில் அவருக்கு உதவி பணம் வழங்கியதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி எஸ்.வி.ராமதாஸ் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி காலமானார். 700 படங்களுக்கு மேல் நடித்து வில்லனாக மக்கள் மத்தியில் இடம் பெற்ற அவர் சொந்த படம் எடுத்த ஒரே ஒரு தவறால் இறுதி நாட்களில் மிகப்பெரிய கஷ்டத்தை அனுபவித்தார்.

பணத்தை விட நட்பு முக்கியம்….. சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி…. எந்த படம் தெரியுமா….?

இவருக்கு சந்திரா என்ற மனைவியும் மூன்று மகன்களும் இருந்தனர் என்பதும் இவரது மகன் வழி பேரன் தான் விஜய் டிவி மைனாவின் கணவர் லோகேஷ் ஆவார்