மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கிடைக்கவில்லையா? உடனே இந்த இணையதளம் செல்லுங்கள்..!

Published:

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1000 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பதும் ஒரு கோடி மகளிர்களுக்கும் மேல் இந்த திட்டத்தால் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இதன் மூலம் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய இன்னொரு வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டத்தின் மூலம் ஏராளமானோர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் சில பயனர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கு முழு தகுதி இருப்பவர்கள் அவர்களுக்கான குறை தீர்ப்பதற்கான அமைப்பு முறையை உருவாக்க உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தாலுகா அளவில் உள்ள உதவி மையங்களில் அல்லது இ சேவை மையங்களில் ரூ.1000 கிடைக்க பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான உதவி தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தென்னரசு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை கிடைக்காதவர்கள் தங்களுடைய விண்ணப்பம் எதனால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. https://kmut.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் எண்ணை பதிவு செய்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஓடிபி எண்ணை பதிவு செய்தால் என்ன காரணத்திற்காக பணம் வரவில்லை என்பதை மகளிர்கள் தெரிந்து கொள்ளலாம். அந்த காரணம் சரியானது இல்லை என்றால் மேல் முறையீடு செய்யலாம்.

உங்களுடைய விண்ணப்பத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய நீங்கள் மேல்முறையீடு செய்யலாம். நிராகரிக்கப்பட்ட குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்ற நாட்களில் இருந்து மேல்முறையீட்டு விண்ணப்பங்களைப் பெற 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது. இந்த மேல்முறையீட்டு விண்ணப்பங்களை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்வார். நேரில் செல்ல இயலாதவர்கள் இ-சேவை மையம் மூலமும் மேல்முறையீடு செய்யலாம். இணையம் மூலம் பெறப்பட்ட மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவுகளோடு ஒப்பிடப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். கள ஆய்வுக்கு பின் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் உங்களுக்காக...