ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும் தெரியுமா? பிரபலம் சொல்வதைக் கேளுங்க…

By Sankar Velu

Published:

ஜாதகம் என்பது ஒரு சாஸ்திரம். அது சரியாக எழுதக்கூடிய ஒருவகையான கணக்கு. இது ஒரு மனிதன் எந்த நேரத்தில் எந்த இடத்தில் பிறக்கிறான் என்ற சூழலை வைத்து அட்டவணைப்படுத்தும் அழகான கணிதம். இது ஒரு அழகான கலை. ஆய கலைகள் 64ல் இதுவும் ஒன்று.

இதைப் படிக்க படிக்க நமக்கு அதில் ஒரு ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும். இந்த ஜோதிடத்தில் நமது ஜாதகத்தை நாம் எத்தனை தடவை பார்க்கலாம்? அதை எப்போது எல்லாம் நமக்குத் தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் பார்த்தால் போதும். குழந்தை பிறந்ததும் நாம் ஜாதகம் எழுதுகிறோம்.

Jathak Kattam
Jathak Kattam

பெண் குழந்தைகள் என்றால் ருதுவானால் அந்த நேரத்தைக் கணக்கிட்டு ஜாதகம் எழுத வேண்டும். அதன்பிறகு உயர் கல்வி படிக்க வெளிநாட்டுக்குப் போகலாமா? எது சம்பந்தமாகப் படிக்கலாம் என்பதற்கு ஜாதகம் பார்க்கலாம்.

பெண் குழந்தைகள் எனில் கல்யாணம் செய்கிற போது பிறந்த ஜாதகம், ருது ஜாதகம் பார்க்கலாம். குழந்தை இல்லாமல் தள்ளிப் போனால் நாம் ஜாதகம் பார்க்கலாம். சில நேரங்களில் நம்மை விட்டு நோய்கள் நீண்ட நாள்களாக நீங்காமல் இருக்கும். அதற்கு என்ன பரிகாரம் செய்தால் அதில் இருந்து விடுபடலாம் அல்லது என்ன வழிபாடு செய்யலாம்என்பதை அறிய ஜாதகத்தைப் பார்க்கலாம்.

தொழில் மேல் பலத்த அடி விழுந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்பதை அறியவும் ஜாதகம் பார்க்கலாம். ஜாதகம் என்பது எங்கெல்லாம் நமக்கு முட்டுக்கட்டை விழுகிறதோ அந்த இடத்தில் நாம் என்ன செய்யலாம் என்பதை அறிய வழிகாட்டுவது தான் ஜாதகம். இது தவிர மாதம் மாதம் ஜாதகம் பார்ப்பது கூடாது.

எதற்கெடுத்தாலும் ஜாதகம் பார்த்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. என்னதான் நமக்கு ஜாதகம் இப்படித் தான் என்று எழுதப்பட்டு இருந்தாலும் நாம் நம்பிக்கையோட நம் வழிபாட்டை செய்ய வேண்டும். இப்படி செய்தால் அந்தப் பிரச்சனைகளில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். இறைவனுக்கு சொல்லப்பட்ட மந்திரங்களை உச்சரித்து சின்ன சின்ன வழிபாடுகளை நாம் செய்யும்போது அதுவே நமக்கு சிறந்த வழியைக் கொடுக்கும்.

ஒவ்வொருவரது வாழ்க்கையையும் இறைவன் இப்படித்தான் என்று வகுத்து வைத்துள்ளார். சில நேரங்களில் பிரச்சனைகள் வரும்போது அவரே அதற்கான வழிகளைக் காட்டியும் வைத்துள்ளார். அந்தப்பாதையில் நாம் நடந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...