சரத்குமார் நடித்த நாட்டாமை திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அது முதல் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தொடங்கி சமீபத்தில் அவர் தனி ஹீரோவாக ஏராளமான படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார் மாஸ்டர் மகேந்திரன்.
கடந்த 1994 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நாட்டாமை திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே மகேந்திரன் நடித்தார். ஆனாலும் அவரது முகம் ரசிகர்கள் மனதில் பதியும் வகையில் அந்த காட்சிகள் அமைந்திருந்தது. அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது நாட்டாமை படத்தில் நடித்த பையன் தானே என்று ரசிகர்கள் அடையாளமும் கண்டு கொண்டனர். இதனால், மிக எளிதாக குறுகிய காலத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற பெயரும் அவரை தேடி வந்தது.
பாண்டியராஜன் நடித்த ’தாய்க்குலமே தாய்க்குலமே’ பிரபு நடித்த ’மகா பிரபு’, ’பரம்பரை’ விஜய் நடித்த ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடிக்க தொடங்கினார். குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்த அவர் கிட்டத்தட்ட அனைத்து பிரபல நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
அதன் பிறகு அவர் இளைஞரான பிறகும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால், குழந்தை நட்சத்திரமாக இவர் எடுத்த பெயர், இந்த சமயத்தில் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் தான், விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்த படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக அவர் நடித்து கலக்கி இருப்பார். மிக குறைவான காட்சிகளில் திரையில் தோன்றி இருந்தாலும் அதனை ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடி இருந்தனர்.
இதனை அடுத்து தனுஷ் நடித்த ’மாறன்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த மகேந்திரன், ஆர்யா நடித்த ’காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த நிலையில், அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் வெளியான ’லேபிள்’ என்ற தொடரிலும் மகேந்திரனுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருந்தது. இவர் முன்னணி நாயகனாக நடித்த ரிப்பப்பரி என்ற படமும் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால், இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
விரல் விட்டு எண்ணக்கூடிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள மகேந்திரன், அதில் அடுத்தடுத்து நடித்த இரண்டு படங்களுக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதையும் வென்றுள்ளார்.
ஹீரோவாக நடித்து தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதே மாஸ்டர் மகேந்திரன் கனவாக இருக்கும் நிலையில் அவருக்கு விரைவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழ் திரை உலகில் நிச்சயம் அவர் ஒரு சாதனை செய்வார் என்றும் கூறப்படுகிறது.