கோவிலுக்குப் போனால் அவரவர் எப்படி சாமி கும்பிடுவதுன்னு தெரியாமலேயே கால்போற போக்கில் சுற்றி கும்பிட்டு விட்டு வருகின்றனர். சிவன் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் இந்த முறைப்படி தான் சிவனை வழிபட வேண்டும். அது ஒரு சூட்சம ரகசியம். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
கோவில்களுக்கு செல்லும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறை உண்டு. உதாரணமாக, பெருமாள் கோவிலில் முதலில் தாயாரை தரிசிப்பது வழக்கம். அதேபோல், சிவன் கோவிலில் சிவபெருமானை எப்படி வழிபடுவது என்பதற்கான ஒரு சூட்சமமான ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.
சிவன் கோவிலுக்கு சென்றதும், முதலில் கோயிலின் கோபுரத்தை தரிசனம் செய்யுங்கள். கோபுரம் என்பது இறைவனின் திருவுருவமாகவே கருதப்படுகிறது. எனவே, கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும். பிறகு கொடிமரத்தடியில் விழுந்து நமஸ்காரம் செய்யுங்கள். இது உங்கள் அகங்காரத்தை விட்டுவிட்டு இறைவனை சரணடைவதை குறிக்கிறது.
பின்னர், பிள்ளையாரையும், முருகரையும் வணங்கிவிட்டு கோயிலுக்குள் செல்லுங்கள். அவர்கள் இருவரும் சிவபெருமானின் பிள்ளைகள் என்பதால், அவர்களை வணங்கிவிட்டு செல்வது மரபு. அதன்பிறகு, கருவறைக்கு செல்லும் வழியில் உள்ள துர்க்கை அம்மனை வழிபடுங்கள். துர்க்கை அம்மன் தீமைகளை அழிக்கும் சக்தி கொண்டவள்.
அடுத்து, சனிபகவானின் சந்நிதிக்கு சென்று பணிவோடு வணங்குங்கள். சனீஸ்வரர் சிவபெருமானின் ஆணைக்கு உட்பட்டவர். எனவே, அவரை வணங்குவதால் சனியின் தாக்கம் குறையும். பிறகு கோயிலில் உள்ள லிங்கோத்பவரை நமஸ்காரம் செய்யுங்கள். இவர் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் சக்தியையும் ஒருங்கே கொண்டவர்.
இதன்பிறகு, சண்டிகேஸ்வரரை தரிசியுங்கள். இவர் சிவபெருமானின் கணங்களில் ஒருவர். சிவபெருமானை தரிசிக்க வருபவர்களின் வரவு, செலவுகளை கவனிப்பவர். அவரிடம் உங்கள் பெயரை மூன்று முறை சொல்லி, நீங்கள் வந்திருப்பதை தெரியப்படுத்துங்கள். இது நீங்கள் வந்ததற்கான பதிவாக கருதப்படுகிறது.
இப்போது, கோயிலை மூன்று முறை வலம் வாருங்கள். மூன்றாவது முறை வலம் வரும்போது, சண்டிகேஸ்வரரிடம் சற்று நேரம் நின்று, கோயிலிலிருந்து எந்த பொருளையும் எடுத்து செல்லவில்லை என்று உங்கள் இரண்டு கைகளையும் காட்டிவிட்டு, உங்கள் வேண்டுதலை சொல்லுங்கள். நீங்கள் சிவபெருமானை தரிசிப்பதற்கு முன்பே உங்கள் கோரிக்கைகளை சண்டிகேஸ்வரர் அவரிடம் தெரிவித்துவிடுவார்.
கடைசியாக, நீங்கள் சிவபெருமானை கண்குளிர தரிசனம் செய்து, உங்கள் வழிபாட்டை நிறைவு செய்யலாம். மற்ற தெய்வங்களை எல்லாம் வழிபட்ட பிறகு சிவபெருமானை தரிசிப்பது, எல்லா வழிபாடுகளையும் முடித்துவிட்டு இறுதியாக இறைவனின் பாதங்களை சரணடைவதை குறிக்கிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



