அன்பு நடமாடும் கலைக்கூடமே… சிவாஜியின் அற்புதமான நடிப்பில் உருவான அவன்தான் மனிதன்!

By Bala Siva

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சாதாரண வேடம் கொடுத்தாலே பிய்த்து உதறிவிடுவார். ஆனால் அருமையான வேடம் கொடுத்தால் அந்த கேரக்டராகவே அவர் மாறிவிடுவார். அப்படி ஒரு படம் தான் கடந்த 1975ஆம் ஆண்டு வெளியான ‘அவன்தான் மனிதன்’. சிவாஜியின் நடிப்புக்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இந்த படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.

சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா, மேஜர் சுந்தர்ராஜன், சோ உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக மனோரமா நடித்த ஒரே படம்.. யாகவா முனிவரை ஞாபகப்படுத்தும் படம்..!

மிகப்பெரிய தொழில் அதிபராக, செல்வந்தராக இருந்த சிவாஜி கணேசன் தானம் என்று யார் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டார். தன்னுடைய எதிர்காலத்திற்கு வேண்டும், தன்னுடைய குடும்பத்திற்கு வேண்டும் என்று எந்த யோசனையும் இல்லாமல் அவர் வள்ளல் தன்மையுடன் இருப்பார்.

ஏற்கனவே மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்த சிவாஜி கணேசன் ஒரு கட்டத்தில் மஞ்சளா இறந்தவுடன் தன்னிடம் செகரட்டரியாக இருக்கும் ஜெயலலிதாவை ஒருமனதாக காதலிப்பார். ஆனால் ஜெயலலிதாவோ சிவாஜியிடம் வேலை செய்யும் முத்துராமனை காதலிப்பார்.

avanthan manithan2 1

ஒரு கட்டத்தில் முத்துராமன், ஜெயலலிதா ஆகிய இருவரும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்ததும் சிவாஜி கணேசன் தன்னுடைய காதலை மறைத்து இருவரையும் சேர்த்து வைத்து விடுவார்.

இந்த நிலையில்தான் திடீரென சிவாஜிக்கு சொந்தமான கப்பல் கவிழ்ந்து விடும். இதனால் அவர் மிகப்பெரிய நஷ்டத்தை அடைவார். கடன் அதிகமாகி தன்னுடைய அரண்மனை போன்ற வீட்டையே விற்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இன்னொரு பக்கம் முத்துராமன் படிப்படியாக உயர்ந்து தொழிலதிபராகி விடுவார். சிவாஜியிடம் வலிய வந்து உதவி செய்வதாக கூறினாலும், சிவாஜி அதனை ஏற்க மாட்டார்.

ஒரு கட்டத்தில் வேலைக்காரர் மேஜர் சுந்தரராஜனின் சின்ன வீட்டில் இருக்கும் சிவாஜி, அப்போதும் கூட தன்னை தேடி வந்தவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பார்.

சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

இந்த நிலையில்தான் ஒருநாள் சிவாஜியை பார்க்க ஜெயலலிதா வருவார். தான் ஒன்றை கேட்ப்பேன், அதை தவறாமல் தர வேண்டும் என்று ஜெயலலிதா கூறுவார். அதற்கு முன் நீ எதாவது சாப்பிட வேண்டும் என்று கூறி தன்னுடைய வேலைக்காரர் சுந்தர்ராஜனிடம் சாப்பிட ஏதாவது கொண்டு வாருங்கள் என்று கூறுவார். ஆனால் மேஜர் சுந்தர்ராஜன் சாப்பிட ஏதுவும் இல்லை என்று கூற அப்போது அவருடைய காதில் சிவாஜி ஒன்று கூறுவார்.

avanthan manithan3 1

இதன் பின்னர் மேஜர் சுந்தரராஜன் ஜெயலலிதாவுக்கு சாப்பாடு கொண்டு வருவார். ஜெயலலிதா அதை சாப்பிட்டு முடித்தவுடன், ‘உங்களிடம் ஒன்று கேட்க வந்திருக்கிறேன் நீங்கள் தவறாமல் அதை கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கூறுவார். இதுவரை நான் யார் கேட்டும் இல்லை என்று கூறியது இல்லை. ஆனால் இப்போது என்னுடைய நிலைமை உனக்கு நன்றாக தெரியும், எனவே தயவு செய்து என்னை இல்லை என்று சொல்ல வைக்காமல் என்னிடம் இருப்பது எதுவென்றாலும் கேள், நான் தந்து விடுவேன்’ என்று கூறுவார். அப்போதுதான் ஜெயலலிதா ‘நீங்கள் வளர்க்கும் புறா மீது எனக்கு ரொம்ப ஆசை, அந்த புறாவை எனக்கு தாருங்கள்’ என்று சொல்வார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த சிவாஜிகணேசன் ஜெயலலிதா கேட்டதை கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் இறந்து விடுவார்.

அப்போதுதான் வேலைக்காரர் மேஜர் சுந்தரராஜன், ‘நீங்கள் இப்போது சாப்பிட்டது அந்த புறாக்கறி தான்’ என்று கூறுவார். இல்லை என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதே என்று நினைத்து அந்த கணத்திலேயே இறந்துவிடும் சிவாஜியின் கேரக்டருடன், சோகத்துடன் படம் முடியும்.

காதல் என்ற வார்த்தை இல்லாமல் கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்கள்.. கேட்டு வாங்கிய எம்ஜிஆர்..!

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக கண்ணதாசன் எழுதிய ‘அன்பு நடமாடும் கலைக்கூடமே’ என்ற பாடல் இன்றுவரை பிரபலம். இந்த பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் ‘மே’ என்ற முடியும். மே மாதம் படப்பிடிப்பு அதற்குள் பாடலை கொடுத்து விடுங்கள் என்று படக்குழுவினர் சொன்னதாகவும் அந்த கோபத்தில் தான் இந்த பாடலை ‘மே’ என்று முடியும் வகையில் கண்ணதாசன் எழுதியதாகவும் கூறப்படுவதுண்டு. ஆனால் இது முழுக்க முழுக்க பொய்யானது என்றும் அந்த கதைக்கு தேவையான வகையில் கலை அம்சத்துடன் கண்ணதாசன் எழுதியுள்ளார் என்றும் அவரது மகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.