சீனா, மியான்மர் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை கண்காணிப்பதற்காக செயின்ட் மார்ட்டின் தீவில் அமெரிக்கா தனது தளத்தை அமைத்துள்ளதாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீவில் உள்ள ஒரு சொகுசு விடுதியை தங்களது முகாமாக மாற்றியுள்ள அமெரிக்க படையினர், அங்கிருந்து தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில், இந்த தீவில் அமெரிக்க மரைன் படைப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வங்காளதேச ராணுவ வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அந்நாட்டு ராணுவத் தளபதி அவசரமாக தீவிற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
வங்காளதேசத்தில் தற்போது நிலவும் குழப்பமான சூழலை பயன்படுத்தி, அந்நிய சக்திகள் அங்கு தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வருகின்றன. குறிப்பாக, உஸ்மான் ஹாதி என்ற இளைஞரின் மரணத்தை மையமாக வைத்து அங்கு ஒரு மிகப்பெரிய அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டு வருகிறது. ஹாதினுடைய மரணம் திட்டமிடப்பட்ட ஒன்றாக தெரிகிறது என்றும், தேர்தலைத் தள்ளி போடவே இத்தகைய வன்முறைகள் தூண்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அங்குள்ள இன்குலாப் மஞ்சோ போன்ற அமைப்புகள், இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட பணி விசாக்களை ரத்து செய்ய வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தி வருவது, இந்த சதியாலோசனையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
வங்காளதேசத்தின் உள்விவகாரங்களில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பின் தலையீடு மிக தீவிரமாக இருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு எதிராக ஒரு ‘இரண்டு முனை அச்சுறுத்தலை’ உருவாக்கும் நோக்கில், பாகிஸ்தான் ஆதரவு படைகள் வங்காளதேசத்தின் எல்லை பகுதிகளில் பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. குறிப்பாக, சூஃபி தர்காக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அங்குள்ள பாரம்பரிய கட்டமைப்பை சிதைக்கும் நோக்கம் கொண்டவை. பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் ஆய்வாளர்களே, வங்காளதேசத்தை இந்தியாவுக்கு எதிரான ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கொள்கையின் அடிப்படையில் வங்காளதேசம் தற்போது ஒரு போர்க்களமாக மாற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக வலைதள பக்கங்களில் வங்காளதேச புரட்சி குறித்து வெளிவரும் பதிவுகள், இந்த போராட்டங்கள் உள்நாட்டிலிருந்து மட்டும் உருவானவை அல்ல என்பதை காட்டுகின்றன. ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கு பின்னால் சர்வதேச சக்திகளின் ஆதரவு இருப்பதும், அவர்களுக்கு பண உதவிகள் வழங்கப்படுவதும் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வங்காளதேசத்தின் அமைதியற்ற சூழல் தெற்காசியாவின் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
வங்காளதேச இடைக்கால அரசாங்கத்திற்குள்ளேயே தற்போது அதிகார போட்டி முற்றியுள்ளது. முகமது யூனுஸின் ஆதரவாளர்களுக்கும், ஜமாத் அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனால் தேசிய குடிமக்கள் கட்சியின் பல முக்கிய தலைவர்கள் பதவிகளை விட்டு விலகி வருகின்றனர். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடந்த மாணவர் போராட்டங்கள், ஷேக் ஹசீனாவை அதிகாரத்திலிருந்து அகற்ற மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்ட ஒரு வெளிநாட்டு சதி என்பதை இப்போது பல தலைவர்களே ஒப்புக்கொள்ள தொடங்கியுள்ளனர். ஒரு மாணவர் புரட்சியாக தொடங்கிய இது, இப்போது மதவாத மற்றும் தீவிரவாத சக்திகளின் கைகளில் சிக்கியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, அண்டை நாட்டில் நடக்கும் இத்தகைய மாற்றங்களை மிக நுணுக்கமாக கவனித்து வருகிறது. இந்திய அதிகாரிகளை மிரட்டும் வகையில் வங்காளதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், அந்நாட்டு மக்களிடையே இந்தியாவுக்கு எதிரான ஒரு மனநிலையை உருவாக்க திட்டமிட்டுச் செய்யப்படுபவை. ‘நாங்கள் வீட்டிற்குள் புகுந்து அடிப்போம்’ என்ற இந்தியாவின் உறுதியான கொள்கை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு வலுவான எச்சரிக்கையாகும். வங்காளதேசத்தில் நடக்கும் இந்த தீய விளையாட்டுகளை இந்தியா ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்பதும், தனது பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்பதும் உலக நாடுகளுக்கு தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
