அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற உடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்த நிலையில், இந்தியா உள்பட சுமார் 75 நாடுகளுக்கு அதிக வரி விதிப்பை விதித்தார். சீனாவுக்கு மட்டும் 104 சதவீத வரி விதிப்பை விதித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் உலகம் முழுவதும் வர்த்தக போர் ஏற்பட்டது என்பதும், இதனை அடுத்து இந்திய பங்குச்சந்தை உள்பட உலகின் பல பங்குச்சந்தைகள் மிக மோசமாக சரிந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று கூடும் நிலை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் இணைந்து அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்று சீனா கூறிய நிலையில், இந்தியாவும் அதை பரிசீலனை செய்ததாக தெரிகிறது.
இந்தியா மற்றும் சீனா இணைந்து அமெரிக்காவை எதிர்த்தால், அமெரிக்க பொருளாதாரமே மிகப்பெரிய அளவில் ஆட்டம் கண்டுவிடும் என்ற அச்சம் காரணமாக, ட்ரம்ப் தற்போது தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார். இந்தியா உள்பட 75 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். ஆனால் அதே நேரத்தில், சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, அமெரிக்கா மேல் இருந்த கோபம் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் தற்போது தணிந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் சீனா ஒன்று சேர்ந்தால், அமெரிக்காவால் சமாளிக்க முடியாது என்று அமெரிக்காவின் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை கூறியதை அடுத்து, ட்ரம்ப் இந்த பின்வாங்கும் முடிவை எடுத்ததாகவும், இந்த முடிவுக்கு இந்தியா தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.
எனவே, இந்திய பொருளாதாரம் கடந்த சில நாட்களாக சிக்கலில் இருந்த நிலையில் இனிமேல் பிரச்சனை சரியாகிவிடும் என்றும், ஆனால் அதே நேரத்தில் சீனாவுக்கு விதிக்கப்பட்ட 104 சதவீத வரி காரணமாக மறைமுகமாக இந்தியாவுக்கும் சில பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, இந்தியா உள்பட மற்ற அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சீனாவுக்கு எதிரான வரியையும் குறைக்க வேண்டும் என அமெரிக்காவை வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், இது நாள் வரை ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தை இன்று முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.