வங்கதேச நீதிமன்றம், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ள நிலையில், அவரது மகன் சஜீப் வாஜித், அமெரிக்காவின் முந்தைய நிர்வாகம் தங்கள் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்காக மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் அமெரிக்காவின் அணுகுமுறை நிச்சயமாக மாறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ஹசீனா மகன் சஜீப் வாஜித், இந்தியாவில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு நடந்த அரசியல் குழப்பத்தின் போது இருந்ததைவிட, அமெரிக்காவின் பார்வை இப்போது மிகவும் மாறியுள்ளது என்று தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், முந்தைய நிர்வாகம் யு.எஸ்.ஏ.ஐ.டி மூலம் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்காக மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டதாக அறிவித்தார். கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களை குறித்துத்தான் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் இஸ்லாமியவாதத்தின் எழுச்சி பற்றி டிரம்ப் நிர்வாகம் அதிக அக்கறை காட்டுவதால், அமெரிக்காவின் மனப்பான்மை நிச்சயமாக மாறியுள்ளது,” என்று வாஜித் கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் மாணவர் குழுக்கள் தலைமையேற்று நடத்திய போராட்டங்கள் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலுக்கு வழிவகுத்தது. ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தபோது, ஹசீனாவின் அதிகாரபூர்வ இல்லத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியதை தொடர்ந்து, அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
வன்முறை அதிகரித்தபோது, ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா ஒரு முக்கியப் பங்காற்றியதாக அவர் கூறினார். “இந்தியா எப்போதும் ஒரு நல்ல நண்பனாக இருந்துள்ளது. இந்த நெருக்கடியில், இந்தியா என் தாயின் உயிரை காப்பாற்றியது. அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால், தீவிரவாதிகள் அவரை கொல்ல திட்டமிட்டிருந்தனர். என் தாயின் உயிரை காப்பாற்றிய பிரதமர் மோடி அரசுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்,” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று யூனுஸ் நிர்வாகம் கோரியது குறித்து பதிலளித்த வாஜித், சட்டத்திற்கு புறம்பான, தேர்ந்தெடுக்கப்படாத தற்போதைய வங்கதேச அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதிக்கும் போது சட்ட நடைமுறையை பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். விசாரணையை விரைவுபடுத்துவதற்காக அவர்கள் சட்டங்களை திருத்தினார்கள், இந்த சட்டங்கள் சட்டவிரோதமாக திருத்தப்பட்டன. என் தாய்க்கு சாதகமாக வாதாட அவரது வழக்கறிஞர்களைக்கூட நீதிமன்றங்களுக்குள் அனுமதிக்கவில்லை.
விசாரணைக்கு முன் நீதிமன்றத்தில் 17 நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் சிலர் அரசியல் தொடர்புகளை கொண்டிருந்தனர். எனவே, முறையான சட்ட நடவடிக்கை எதுவும் பின்பற்றப்படவில்லை.”
நவம்பர் 17 அன்று, வங்கதேசத்தின் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் (ICT), 78 வயதான முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, 2024 ஜூலை-ஆகஸ்ட் எழுச்சியுடன் தொடர்புடைய ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக’ மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் கவிழ்ந்த பிறகு ஹசீனா இந்தியாவில் வசிப்பதால், அவர் இல்லாத நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
