12 வருசமா அரை மணி நேரம் மட்டுமே தூங்கும் நபர்.. பிட்னஸ் ரகசியத்தால் பலரையும் அண்ணாந்து பாக்க வெச்ச மனுஷன்..

By Ajith V

Published:

இன்றைய காலகட்டத்தில் ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப துறைகளில் வேலைப்பளு என்பது அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பலரும் விபரீதமான முடிவுகளையும் கூட எடுத்து வருகின்றனர். பொதுவாக அனைவருமே 8 மணி நேரம் வேலை என்ற ஒரு விஷயம் இருந்து வரும் நிலையில் இதை தாண்டி பத்து முதல் 14 மணி நேரங்கள் வரை வேலை செய்யும் நபர்களும் ஏராளமாக உள்ளனர்.

பணத்தை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும் இவர்கள் கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் இயங்கி வருவதால் தூக்கத்தை கூட இவர்களால் மிகச் சரியாக மேற்கொள்ள முடியவில்லை. பலரும் ஐந்து முதல் ஆறு மணி நேரங்கள் கூட தினமும் தூங்காமல் இருந்து வரும் சூழலில் அதுவே அவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கி ஏதாவது ஒரு தவறான வழியிலும் கொண்டு செல்ல வழி வகுக்கிறது.

ஒரு மனிதன் தினந்தோறும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை நிச்சயம் தூங்கியே ஆக வேண்டுமென பல நிபுணர்களும் எச்சரித்து வரும் நிலையில் அதனை நிச்சயம் பலரால் நிறைவேற்ற முடியாமல் தான் இருந்து வருகிறது. ஆனால் அப்படியே இதற்கு நேர் மாறாக நபர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக சுமார் அரை மணி நேரம் மட்டும் தினந்தோறும் தூங்கி வரும் தகவல் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது .

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தான் டைசூகி ஹோரி ((Daisuke Hori)). இவர் தினந்தோறும் அரை மணி நேரம் தான் தூக்கத்தை கடைபிடித்து வருகிறார். அரைமணி நேரம் தான் தினமும் தூங்குகிறார் என்றால் அது கேட்பவருக்கு நிச்சயம் ஒரு மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பலாம். ஆனால் இது பற்றி பேசும் டைசூகி ஹோரி, அரை மணி நேரம் மட்டுமே தூங்குவதால் தனக்கு உடல் ரீதியாக ஆரோக்கிய ரீதியாக எந்த பிரச்சனையும் நிகழவில்லை என்றும் கூறி உள்ளார்.

ஏனென்றால் அதற்கேற்ப தனது மனதையும் உடலையும் பயிற்சி மேற்கொண்டு சாதாரணமாக அமைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் டைசூகி ஹோரி ஒரு முறை கூட சோர்வாக இருந்தது போல தோன்றியதில்லை என்று கூறுகிறார். மேலும் இவர் வாரத்திற்கு 16 மணி நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டும் வருகிறார்.

அது மட்டுமில்லாமல், ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர்ஸ் பயிற்சி அமைப்பு ஒன்றையும் நடத்தி வரும் டைசூகி ஹோரி, மக்கள் மத்தியில் குறைந்த நேர தூக்கத்தை கடைபிடிக்க வழி வகுப்பதுடன் 2,100 மாணவர்களுக்கு இதன்மூலம் பயிற்சி கொடுத்துள்ளார். இவர் தூங்குவது தொடர்பாக ஒரு டிவி சேனல் ஒன்று நேர்காணலை நடத்தி மூன்று தினங்கள் கண்காணித்த போது 26 நிமிட தூக்கத்திற்கு பின்னரும் கூட மிக எனர்ஜியுள்ள நபராக வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.

அவரிடம் பயிற்சி பெற்ற பெண் ஒருவர் இது பற்றி பேசுகையில் எட்டு மணி நேர தூக்கத்திலிருந்து 90 நிமிடங்களாக அதனை மாற்றிக் கொண்டதுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக இதனை செயல்படுத்தி வருவதாகவும் கூறி உள்ளார். இதனால் தனக்கு எந்தவித உடல் ரீதியான பிரச்சனையும் வரவில்லை என்றும் தற்போது முன்பை விட இன்னும் சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

12 ஆண்டுகளாக ஒருவர் அரை மணி நேரம் மட்டுமே தூங்கி வருவது தற்போது பலரது மத்தியில் பேசுபொருளாகவும் மாறி உள்ளது.

மேலும் உங்களுக்காக...