ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியோ கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், பணியிடத்தில் தங்களது இலக்குகளை அடையாத ஊழியர்களை நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை எடுத்து துன்புறுத்தியதாகவும், பாலியல் துன்புறுத்தல்களையும் செய்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
மின்சாரம் மற்றும் ஆற்றல் சேமிப்பு உபகரணங்களை நிறுவும் துறையில் இயங்கி வரும் இந்நிறுவனம் மீது, கடந்த 2025 மார்ச் மாதம் ஐந்து முன்னாள் ஊழியர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், உடல்ரீதியான தாக்குதல்கள், மற்றும் நியாயமற்ற ஊதிய குறைப்புகள் என தாங்கள் அனுபவித்த சித்திரவதைகளுக்கு இழப்பீடாக சுமார் $132,000 கோரி அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஒரு முன்னாள் ஊழியர் தனது தினசரி விற்பனை இலக்கை அடைய தவறினால், தனது விற்பனை மேலாளர் தன்னை நிர்வாணப் படம் எடுத்து அனுப்பும்படி கட்டாயப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். இந்த அவமானகரமான தண்டனை அத்துடன் நிற்கவில்லை. எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் மற்ற ஊழியர்களுடன் பகிரப்பட்டு, “இது பகிரப்பட்டுள்ளது” என்ற செய்தி தனக்கு அனுப்பப்பட்டதாகவும் அந்த ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த ஊழியர் வெளியிட்ட மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல்படி, தனது உயர் அதிகாரி வழக்கமாக தண்டனையின் ஒரு பகுதியாக தனது பிறப்புறுப்புகளை தொடுவார் என்று கூறியுள்ளார். “என் உயர் அதிகாரி அவ்வாறு செய்யும்போது அது மிகவும் வேதனையாக இருந்தது, என்னால் பேசக்கூட முடியவில்லை. இது போன்ற சம்பவங்கள் எப்போதும் நடக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்துக் கிளை மேலாளரிடம் புகார் அளித்தபோது, “எல்லோரும் இதை கடந்துதான் வந்துள்ளனர்” என்று கூறி அவர் கேலிக்குள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தொடர்ச்சியான துன்புறுத்தலின் காரணமாக, அந்த ஊழியருக்கு மனச்சோர்வு மற்றும் உடல்நிலை மாற்றங்கள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் பாலியல் ரீதியான இழிவுபடுத்துதலை தாண்டி அதிக வேலை நேரம், வாய்மொழி துஷ்பிரயோகம், மற்றும் உடல்ரீதியான அச்சுறுத்தல்கள் நிறைந்த பணியிட சூழல் நிலவி வந்ததாக பல புகார்கள் வெளிவந்துள்ளன. ஒரு கிளை மேலாளர், ஒரு நிறுவன இயக்குநரின் அதிகாரப்பூர்வ இரவு விருந்தை தவிர்த்ததற்காக தான் கன்னத்தில் அறையப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மற்ற ஊழியர்கள், தங்களது விற்பனை கமிஷன்கள் தன்னிச்சையாக கழிக்கப்பட்டதாகவும், சில சமயங்களில் தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை நிறுவனத்திற்கு கட்டாயமாகத் திருப்பி செலுத்தும்படி உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், பணியின்போது விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டதாகவும், சில அபராதங்கள்(சுமார் $42,000 அமெரிக்க டாலர்கள் வரை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நியோ கார்ப்பரேஷன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஒரு அறிக்கையில், இந்த தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானது என்று தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
