குஜராத் மாநிலத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த சுமார் 250 வங்கதேச பிரஜைகள், ஒரு சிறப்பு விமானம் மூலம் வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் பலத்த பாதுகாப்புடன் விமான நிலைஅம் வரை அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அவர்களின் கைகள் கயிறுகளால் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வதோதரா விமானப்படை தளத்திலிருந்து இந்த சிறப்பு விமானம் புறப்பட்ட நிலையில் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கைகள் கட்டப்பட்ட நிலையில் வங்கதேச பிரஜைகள் அமர்ந்திருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் கைகளில் விலங்கிடப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 1,200 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அகமதாபாத், சூரத், வதோதரா மற்றும் ராஜ்கோட் போன்ற குஜராத்தின் முக்கிய நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான வங்கதேச குடியேற்றவாசிகள் குடியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக, உள்ளூர் காவல்துறை உட்பட அதிகாரிகள், சட்டவிரோத குடியேற்றவாசிகளை அடையாளம் காண தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பலர் போலியான பான் மற்றும் ஆதார் அட்டைகளை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம், குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, கடந்த சில நாட்களில் மட்டும் 200 ஆவணமற்ற வங்கதேச பிரஜைகளை மாநிலக் காவல்துறை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்திருந்தார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்களை நாடு கடத்தும்போதும் இதே மாதிரி கைகள் மட்டும் கால்கள் கட்டப்பட்டு தான் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பதும் இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதேபோன்றே கைகள் கட்டப்பட்ட நிலையில் வங்கதேசத்தினரை இந்தியா நாடு நடத்தி உள்ளது வர கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது